

உத்தரப் பிரதேசத்தின் கோசாலைகளுக்குப் பாதுகாப்பாக சிசிடிவி கேமரா அமைக்கப்பட உள்ளது. அலிகரில் 8 பசுக்கள் பலியானதை அடுத்து இந்த நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு எடுத்துள்ளது.
பசுக்களுக்கான பாதுகாப்பு குறித்து பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இதனால், அவற்றுக்குத் தொடர்ந்து பல்வேறு வகையிலான பாதுகாப்பு உத்தரப் பிரதேசத்தில் கிடைத்து வருகிறது.
இவற்றையும் மீறி பசுக்கள் பலியாகி விடும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இந்தவகையில், உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் பரூலா பைபாஸ் சாலையில் நந்தி கோசாலை அமைந்துள்ளது.
அலிகர் மாநகராட்சியால் நடத்தப்படும் இக்கோசாலையின் பணியாளர்கள் தீபாவளிக்காக 5 நாள் விடுப்பு எடுத்திருந்தனர். இந்த நாட்களில் நந்தி கோசாலையின் பசுக்களுக்குத் தீனி அளிக்கவும் ஆட்கள் இல்லாமல் போயினர்.
இதனால், அங்கிருந்த 123 பசுக்களில் எட்டுப் பசுக்கள் பட்டினியால் மடிந்தன. இதன் காட்சிகள் சிலரால் வீடியோவாகப் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, அதன் பாஜக எம்எல்ஏவான அனில் பராஷர், அலிகர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையரான அருண் குமார் குப்தா ஆகியோர் நந்தி கோசாலைக்கு நேரில் சென்றனர். இறந்துபோன பசுக்களின் இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூறு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து அலிகர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையரான அருண் குமார் குப்தா கூறும்போது, "பாலித்தீன் பைகள் உண்பதாலும் பசுக்களின் இறப்பு நேர்கிறது. உடற்கூராய்வின் முடிவுகளில் இது தெரியவரும். இருப்பினும், பசுக்களின் கூடுதல் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இந்த சிசிடிவி வசதி அலிகரில் உள்ள 161 அரசு கோசாலைகளுக்கும் அமைக்கப்பட உள்ளது. சிசிடிவி கேமரா படக்காட்சிகளை நேரடியாகக் கண்காணிக்க அவை மாநகராட்சி அதிகாரிகளின் கைப்பேசிகளில் இணைக்கப்படுகிறது.
இதன் பலனைப் பொறுத்து படிப்படியாக மாநிலம் முழுவதிலும் முதல்வர் யோகி அரசு சிசிடிவியை அமைக்க உள்ளது. சில நாட்களுக்கு முன் பசுக்களுக்காக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் தனியாக ஒரு அமைச்சகமும் உருவாக்க முடிவு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.