சிராக் பாஸ்வான் தனித்துப் போட்டியிட்டதால் என்டிஏவுக்கு இழப்பு; மத்திய கூட்டணியிலிருந்து எல்ஜேபியைக் கழட்டி விடுகிறதா பாஜக?

சிராக் பாஸ்வான்
சிராக் பாஸ்வான்
Updated on
2 min read

பிஹார் தேர்தலில் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டதால், என்டிஏவுக்கு வாக்கு சதவீதத்துடன் தொகுதிகளும் குறைந்தன. இதனால், மத்திய அரசின் கூட்டணியாக இருக்கும் சிராக்கைக் கழட்டிவிட பாஜக யோசனை செய்து வருகிறது.

பிஹாரின் 243 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது எல்ஜேபி. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியை மட்டும் எதிர்ப்பதாகவும், பாஜகவை ஆதரிப்பதாகவும் அதன் தலைவர் சிராக் அறிவித்திருந்தார்.

இதன் பின்னணியில் ஜேடியுவை விட அதிக தொகுதிகளை பாஜக பெற்று முதல்வர் பதவியில் அமர முயல்வதாகக் கருதப்பட்டது. இதில் வாக்குகளைப் பிரிக்கும் தனது அரசியல் தந்திரம் இருப்பதாகப் பேசப்பட்டதை பாஜக மறுத்து வந்தது.

எனினும், 116 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியுவை விட அதிகமாக 143 தொகுதிகளில் எல்ஜேபி போட்டியிட்டது. இதனால், வேறு வழியின்றி, எல்ஜேபி பல தொகுதிகளில் பாஜகவையும் எதிர்த்து தனது வேட்பாளர்களை நிறுத்தியது.

இதில் ஒரே ஒரு தொகுதியைப் பெற்ற எல்ஜேபியால், பாஜகவும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் என்டிஏவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் 5 ஆகக் குறைந்தது.

பல தொகுதிகளில் வாக்குகள் பிரிந்து பாஜக தோல்வியுறவும் எல்ஜேபி காரணமானது. இதனால், எல்ஜேபி மீது பாஜகவுக்கு அதிருப்தி உருவாகிவிட்டதாகத் தெரிகிறது.

என்டிஏவின் மத்திய அரசில் கூட்டணிக் கட்சியாகத் தொடரும் சிராக், தேர்தலுக்குப் பின் தம் தந்தை வகித்த மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியுள்ளார். தற்போது இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகத் தொடங்கி விட்டன.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, "நிதிஷை மட்டும் கடுமையாக விமர்சித்த சிராக், ஆர்ஜேடியையும், காங்கிரஸ் குறித்தும் அதிகமாகப் பேசவில்லை.

இதற்கு முடிவுகளின் மாற்றத்தைப் பொறுத்து அவர் மெகா கூட்டணியில் சேரத் திட்டமிட்டிருந்ததாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, அவரை என்டிஏவிலிருந்து கழட்டி விட யோசித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.

பிஹாரில் முதல்வராக அமர்ந்த நிதிஷ், தேர்தலுக்கு முன்பிலிருந்தே சிராக் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாஜகவிடம் வலியுறுத்தி வருகிறார். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நிதிஷ், கூட்டணியிலிருந்து வெளியேறும் அபாயமும் உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் இல்லாத எல்ஜேபிக்கு மக்களவையில் மட்டும் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். தம் கட்சிக்கு தனி மெஜாரிட்டி உள்ள மக்களவையில் சிராக்கின் ஆதரவு பாஜகவுக்குத் தேவையில்லாத நிலை உள்ளது.

மேலும், பிஹாரில் தொடர்ந்து வளர்ந்து வரும் பாஜகவுக்கு எதிர்காலத்தில் சிராக்கின் உதவியும் தேவைப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையால், சிராக் பாஸ்வான் மத்தியிலும், மாநிலத்திலும் தனித்து விடப்படும் வாய்ப்புகள் தெரிகின்றன.

பிஹாரில் சுமார் 19 வருடங்களுக்கு முன் ராம்விலாஸ் பாஸ்வானால் தொடங்கப்பட்டது எல்ஜேபி. தலித் சமூக ஆதரவுக்கட்சியாக வளர்ந்த எல்ஜேபி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் மாறி, மாறி கூட்டணி வைத்திருந்தது.

இதனால், இரண்டு கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளிலும் ராம்விலாஸ் மத்திய அமைச்சர் பதவி பெற்றிருந்தார். இவரது வாரிசாக எல்ஜேபியில் நுழைந்த சிராக் பாஸ்வான், கட்சியின் முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in