Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

போராட்டங்கள் நடைபெறும் நிலையில் புதிய வேளாண் சட்டத்தின் கீழ் வர்த்தகர் மீது வழக்கு தொடர்ந்து நிலுவையை வசூலித்த விவசாயி

புதிய வேளாண் சட்டத்தின் பலனாக வர்த்தகர் மீது வழக்கு தொடர்ந்து தனக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்துள்ளார் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த விவசாயி.

புதிய வேளாண் சட்டத்துக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், இந்த சட்டத்தில் உள்ள சாதக அம்சங்களில் ஒன்றான வர்த்தகர் மீது வழக்கு தொடரும் வசதியைக் கொண்டு வழக்கு தொடர்ந்து ரூ.2.85 லட்சம் நிலுவைத் தொகையை வசூலித்துள்ளார் மகாராஷ்டிர விவசாயி.

வேளாண் உற்பத்தி வர்த்தக சட்டம் 2020 கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் வேளாண் விளை பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யும் வர்த்தகர்கள் அதற்குரிய தொகையை 3 நாட்களுக்குள் விவசாயிகளுக்குத் தர வேண்டும் என்பதும் சட்டமாகும்.

சில மாநிலங்களில் உள்ள விவசாயிகள் குறிப்பாக பஞ்சாப் மாநில விவசாயிகள், புதிதாக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத்தால் தங்களது விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பதில் தங்களுக்குள்ள பேரம் பேசும் சக்தி போய்விடும் என கருதுகின்றனர். மேலும் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் எதிர்காலத்தில் மேலோங்கும் என அவர்கள் தங்களது எதிர்ப்பை நியாயப்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர போய் என்ற விவசாயி, இதுநாள் வரையில் தன்னிடம் பொருட்களைக் கொள்முதல் செய்துவிட்டு பணத்தை சரியாக தராமல் இழுத்தடிக்கும் வர்த்தகர் மீது வழக்கு தொடர்ந்து, உரிய காலத்தில் நிலுவைத் தொகையைப் பெற்றுள்ளார்.

இவர் துலே மாவட்டம் படானே கிராமத்தில் உள்ள 18 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். ஜூலை 19-ம் தேதி 270.95 குவிண்டால் சோளத்தை ஒரு குவிண்டால் ரூ.1,240 விலையில் சுபாஷ் வாணி மற்றும் அருண் வாணி என்ற 2 இரண்டு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்த வர்த்தகர்கள் அருகிலுள்ள கேதியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் கொள்முதல் செய்த சோளத்தின் மதிப்பு ரூ.3,32,617 ஆகும்.

மொத்த சோளத்தையும் இவரிடம் இருந்து கொள்முதல் செய்த வர்த்தகர்கள், முன்பணமாக ரூ.25 ஆயிரம் அளித்துள்ளனர். எஞ்சிய தொகையை 15 நாளில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். நான்கு மாதங்கள் சென்ற நிலையில் அக்டோபர் முதல் வாரம் வர்த்தகர்களை அணுகி நிலுவைத் தொகையைக் கேட்டுள்ளார். அப்போதும் நிலுவைத் தொகை கிடைக்கவில்லை.

இந்நிலையில் வர்த்தக மையத்தில் உள்ள எழுத்தர் ஒருவர் புதிய வேளாண் சட்டத்தில், நிலுவைத் தொகையை வசூலிக்க வழக்கு தொடரும் வழி இருப்பது குறித்து தம்மிடம் தெரிவித்ததாக ஜிதேந்திர போய் தெரிவித்துள்ளார்.

அதன்படி புதிய வேளாண் சட்டத்தின் விதி 8-ன்படி துணை கோட்ட அதிகாரி, இந்த வழக்கை விசாரித்து விரைவாக தீப்பளிக்க வேண்டும். புகார் மனு வந்தவுடன் அக்டோபர் 6-ம் தேதி சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கிரிமினல் நடவடிக்கையும், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட் உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார். நிலுவைத் தொகை அளிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக மாவட்ட ஆட்சியர் ஷிவ்ராஜ் சிங் வர்மாவிடம் நவம்பர் 5-ம் தேதி எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x