

மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தை விசாரிக்க சிபிஐ முடிவுசெய்துள்ளது.
மும்பை மருத்துவமனையில் சிகிச்சையின்போது இ்ந்திராணி யிடம் பரிசோதனைக்காக எடுக் கப்பட்ட ரத்த, சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை பத்திரப்படுத்திவைக் கும்படியும் மாநில அரசை சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு மும்பை பைகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலைக்கு உடந்தையாக இருந்த தாக இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சய் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரும் சிறையில் உள்ளனர்.
மும்பை போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு அண்மை யில் சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்திராணி அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. மும்பை ஜே.ஜே. மருத்துவ மனையில் ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் அண்மையில் சிறை திரும்பினார்.
அவரையும் மற்ற இருவரையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கு நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. சிபிஐ விசா ரணையின்போது இந்திராணி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தையும் விசாரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.
மருத்துவமனையில் இந்திராணி சிகிச்சை பெற்ற போது அவரின் சிறுநீர் மாதிரிகள் இருவேறு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.
இதில் ஓர் ஆய்வகம் அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை களை உட்கொண்டிருப்பதாக அறிக்கை அளித்தது. மற்றொரு ஆய்வகம் இந்திராணி அதிக மாத்திரைகளை உட்கொண்டதாக தெரியவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை ஐ.ஜி. பிபின் குமார் சிங் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.