

வன்முறை கும்பலால் கொல்லப்பட்ட முகம்மது இக்லாக்கின் மூத்த மகன் முகம்மது சர்தாஜ் விமானப் படையின் சென்னை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் விமானப்படை தளபதி அரூப் ராகா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. விமானப் படையில் பணியாற்றும் ஒருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டதும், இதனால் அவரது குடும்பத்தில் ஒருவர் இறந்ததும் துரதிருஷ்டவசமானது. அவருடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவரது குடும்பத்துக்கு எத்தகைய பாதுகாப்பு தேவையோ அதனை அளிப்போம்.
அவர்களை விமானப் படை குடியிருப்புக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். அவர்களுக்கு உதவுவதற்காக எங்கள் படையினர் அங்கு தங்கியுள்ளனர்” என்றார்.
சர்தாஜ் சென்னையில் பணியாற்றுவதால் அவரது குடும்பத்தினரை இங்கு அனுப்பி வைப்பது அல்லது சர்தாஜ் விரும்பும் இடத்தில் பணியிடமாற்றம் வழங்குவதற்கு முயற்சி நடப்பதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் ஆறுதல்
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிசோதா சென்று, இக்லாக் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கிராம மக்களிடமும் அவர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இக்லாக் குடும்பத்தினரை ராகுல் சந்திக்கும் புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. “பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும். தாத்ரி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கோரியுள்ளது.