

நாகாலாந்தில் முதல்வராக இருந்த நெய்பியூ ரியோ மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாகா மக்கள் முன்னணியைச் (என்பிஎப்) சேர்ந்த டி.ஆர். ஜெலியாங் (62) புதிய முதல்வராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொஹிமாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜெலியாங் மற்றும் 11 அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் அஷ்வனி குமார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முந்தைய அரசில் அமைச்சர்க ளாக இருந்த நோக் வாங்னாவ், குஸோலுஸோ நெய்னு, கியானிலீ பெசேயீ, ஜி.கைடோ மற்றும் ஒய் பட்டான் ஆகிய 5 பேரும் ஜெலியாங் அமைச்சரவையில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். 6 பேர் புதியவர்கள்.
மக்கள் முன்னணி (என்பிஎப்) தலைமையிலான கூட்டணி அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைந்தது. அப்போது ரியோ மீண்டும் முதல்வரானார். 11 ஆண்டுகளாக முதல்வர் பதவி வகித்த அவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, வெள்ளிக்கிழமை அவர் பதவி விலகினார்.
கொஹிமா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜெலி யாங், கடந்த 1976-ம் ஆண்டு பெரன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர் 1982 மற்றும் 1987ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அதன்பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ், என்பிஎப் சார்பில் மாறி மாறி போட்டியிட்ட அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். பல்வேறு அரசுகளில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
மோடி வாழ்த்து
புதிதாக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜெலியாங்குக்கு பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாகாலாந்தின் முன்னேற்றப் பயணத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெலி யாங்கின் என்பிஎப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.