

கர்நாடக மாநிலத்தில் கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளுடன் 8 மாதங்களுக்குப் பின் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், குறைந்த அளவிலேயே மாணவர்கள் வருகை புரிந்ததால் ஆசிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாகக் கர்நாடகாவில் மற்ற மாநிலங்களைப் போலவே கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கரோனா பரவல் காரணமாக புதிய கல்வி ஆண்டுக்காகக் கடந்த ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாகக் குறைந்தது. இதையடுத்து முதல்வர் எடியூரப்பா 17-ம் தேதி (நேற்று) முதல் இளங்கலை, முதுகலை, பொறியியல், சட்டம் உள்ளிட்ட கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்தார்.
இதன்படி 8 மாதங்களுக்குப் பின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து பெற்றோரின் ஒப்புதல் கடிதம், கரோனா பரிசோதனைச் சான்றிதழுடன் வந்த மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலமாகவும் படிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டது. வகுப்பறையில் மாணவர்கள் போதிய சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.
இதுகுறித்துப் பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் கெம்பராஜூ கூறுகையில், ''அரசு வழங்கியுள்ள கரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டன. மாணவர் வருகை குறைவாக இருந்ததால் கல்லூரி நிர்வாகிகள் வருத்தம் அடைந்துள்ளனர். பண்டிகைக் காலம், போக்குவரத்து வசதியில் குறைபாடு, பெரும்பாலான விடுதிகள் மூடல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர் வருகை குறைவாக இருக்கிறது என நினைக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.