

பெங்களூரு கலவர வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் மேயர் சம்பத் ராஜ் இன்று கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி புலிக்கேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன், முகநூலில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இதற்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அன்றிரவு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி காவல் நிலையங்கள், அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு ஆகியவை தாக்கப்பட்டன. 200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்ட நிலையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.
இவ்வழக்கில் எஸ்டிபிஐ, பிடிபி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரித்தபோது காங்கிரஸ் கவுன்சிலரும், முன்னாள் மேயருமான சம்பத் ராஜ், கவுன்சிலர் ஜாகீர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருவரின் பெயரையும் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததைத் தொடர்ந்து சம்பத் ராஜ் தலைமறைவானார்.
இந்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள தன் நண்பரின் வீட்டில் இருந்த சம்பத் ராஜைக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கடந்த தேர்தலில் மஜதவில் இருந்து காங்கிரஸுக்கு வந்த அகண்ட சீனிவாச மூர்த்திக்கு புலிக்கேசி நகர் தொகுதியை ஒதுக்கியதால் சம்பத் ராஜ் அதிருப்தி அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையில் உரசல் இருந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தன் உதவியாளர்கள் அருண், சந்தோஷ், அப்துல் ரகீப் ஆகியோர் மூலம் அகண்ட சீனிவாச மூர்த்திக்கு எதிராகக் கலவரக்காரர்களைத் திருப்பியதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.