Last Updated : 18 Nov, 2020 02:22 PM

 

Published : 18 Nov 2020 02:22 PM
Last Updated : 18 Nov 2020 02:22 PM

எங்களுக்கு முதல்வர் பதவி வழங்க மறுத்த பாஜக; நிதிஷ் குமாருக்கு வழங்கி தியாகம் செய்துள்ளது: சிவசேனா கிண்டல்

எங்களுக்கு முதல்வர் பதவி வழங்க மறுத்த பாஜக, பிஹாரில் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை வழங்கி தியாகம் செய்துள்ளது என்று சிவசேனா கட்சி பாஜகவைக் கிண்டலாக விமர்சித்துள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 74 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் வென்றது. 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 75 இடங்களைக் கொண்ட ஒரே மிகப்பெரிய கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் உருவெடுத்தது.

மத்தியில் பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணி வென்று ஆட்சி அமைத்துள்ளது. இங்கு என்டிஏவிற்குத் தலைமை வகித்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார், நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) பதவியேற்று ஏழாவது முறையாக முதல்வரானார்.

நிதிஷ் குமாருக்குப் பல்வேறு மாநிலக் கட்சிகளும் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், அவருக்கு முதல்வர் பதவி வழங்கியமைக்காக சிவசேனா கட்சி, பாஜகவைக் கிண்டலாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக 105 இடங்களை வென்றது. அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த சிவசேனா 56 இடங்களைப் பிடித்தது.

ஆயினும், முதல்வர் பதவியைப் பகிர்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து இரு கட்சிகளும் பிரிந்தன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பின்னர் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் கைகோத்து மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைத்தது.

இந்நிலையில் சிவசேனா நடத்தும் சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில், பிஹாரில் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியைப் பாஜக வழங்கியுள்ளது குறித்துக் கூறியுள்ளதாவது:

''கூட்டணிக் கட்சியின் ஆதரவுச் சுமையிலேயே நிதிஷ் குமார் ஒரு புதிய பாதையில் செல்வாரோ என்று வியக்க வேண்டியுள்ளது. ஆனால், அப்படி அவர் சென்றால் எவ்வளவு காலம் அவர் பதவியில் நீடிப்பார் என்பதுதான் தெரியவில்லை.

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்ததையடுத்து சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. எங்களுக்கு முதல்வர் பதவி வழங்க மறுத்த பாஜக, பிஹாரில் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை வழங்கியுள்ளது.

ஆனால், பிஹாரில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட கட்சிக்கு முதல்வர் பதவி. என்ன ஒரு தாராளம்! அரசியலில் பாஜக செய்துள்ள இந்தத் தியாகத்தை விவரிக்க பத்திரிகையில் மை பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தை என்சிபி தலைவர் சரத் பவார் நடத்துவதாக பாஜக தலைவர்களான சந்திரகாந்த் பாட்டீல், மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

ஆனால், இந்தத் தலைவர்கள், நிதிஷ் குமார் அரசாங்கத்தை யார் சரியாக நடத்துவார்கள் என்பதைக் கவனிக்க பிஹாரில் அல்லவா ஒரு கண் வைத்திருக்க வேண்டும்''.

இவ்வாறு சாம்னா பத்திரிகை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x