

கரோனா தொற்று சூழலில் கல்வி உதவித்தொகை வருவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை விளக்கம் அளித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றினால் கல்வி உதவித்தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும் சில செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இதன் உண்மைத் தன்மையை விளக்கும் வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, மாநில அரசுகள்/ யூனியன் பிரதேச நிர்வாகங்கள்/ பல்கலைக்கழக மானிய குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்தோ அல்லது நேரடியாகவோ பட்டியலினத்தவர்/ இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஏராளமான உதவித் தொகைகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றினால் யாருக்கும் சிரமம் ஏற்படாத வகையில் இந்த திட்டங்களை செயல்படுத்தும் முகமைகளை இந்தத் துறை துரிதப்படுத்தி வருகிறது. பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்படும் 'போஸ்ட் மெட்ரிக்' உதவித்தொகையில் மத்திய அரசின் பங்கில் 75 சதவிதம் கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேவைகளை உத்தேசித்து வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவீதம் விண்ணப்பதாரரின் தகுதி அறிந்து வழங்கப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இதர திட்டங்களுக்கான நிதியும் முறையாக முகமைகளிடம் வழங்கப்பட்டு வருவதுடன், குறிப்பிட்ட அதிகாரிகளால் தினமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.