

டெல்லியில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் டெல்லியில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக வெளியான தகவலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லியில் இதுவரை 4.95 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 6,396 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. 99 பேர் கரோனாவுக்குப் பலியாகினர்.
இந்நிலையில் நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்போவதாகப் பேசியிருந்தார்.
கரோனா பரவலுக்கான மையப் புள்ளியாக அறியப்பட்ட சந்தைகள் உள்பட சில பொது இடங்களை சில நாட்களுக்கு மூடிவைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.
அதுபோல், இனி திருமண வைபவங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்றார். இதுநாள் வரை 200 பேர் வரை திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனால் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் பரவத் தொடங்கியது. இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. ஊரடங்குக்கான அவசியமும் இல்லை. அதன் விளைவு என்னவென்பதை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.
ஆனால், சில கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும். சத் பூஜாவில் அதிகமானோர் பங்கேற்கலாம் என்பதால் கூட்ட நெரிசலால் கரோனா பரவ வாய்ப்பிருக்கிறது. அதனாலேயே சில கெடுபிடிகளை விதிக்கவுள்ளோம்.
அன்றாடம் சுமார் 60,000 பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனையை மேலும் அதிகரிக்கவே முயன்று வருகிறோம். ஆர்டி-பிசிஆர் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளையும் அதிகரிப்போம்" என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லியில் கரோனா 3-வது அலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கே தற்போது 82,904 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2-வது இடத்தில் 70,191 பேருடன் கேரளா உள்ளது. தலைநகர் டெல்லியில் 42,004 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 15-ம் தேதியன்று டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.