Last Updated : 18 Nov, 2020 12:58 PM

 

Published : 18 Nov 2020 12:58 PM
Last Updated : 18 Nov 2020 12:58 PM

கபில் சிபலின் வெறும் பேச்சு எதையும் சாதிக்காது: காங்கிரஸின் ஆதிர் சவுத்ரி எம்.பி.பதிலடி 

காங்கிரஸ் தலைமையை விமர்சித்த மூத்த தலைவர் கபில் சிபலுக்கு கட்சியிலேயே பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ''வெறும் பேச்சு எதையும் சாதிக்காது'' என்று கூறியுள்ளார்.

பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள கருத்துகள் காரணமாக அவர் மீதே விமர்சனங்கள் எழுந்தன. பேட்டியில் காங்கிரஸ் தலைமையைக் கபில் சிபல் கடுமையாக விமர்சித்திருந்தார். இது காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கபில் சிபலின் கருத்துக்குப் பதிலளிக்கும்விதமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ''கபில் சிபல் தனது பேட்டியில் அவ்வாறு விமர்சித்திருக்கக் கூடாது. இது நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது'' என்றார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ''ஊடகத்தில் விமர்சித்து வரும் உட்கட்சி நிர்வாகிகள் சந்தேகப் பேர்வழிகள். திடீர் பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள்'' என விமர்சனம் செய்தார்.

தற்போது கபில் சிபலுக்குப் பதிலளிக்கும்விதமாக மேற்கு வங்க மாநிலக் காங்கிரஸ் தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி.கூறியுள்ளதாவது:

"கபில் சிபல் இதைப் பற்றி முன்பே பேசினார். காங்கிரஸின் தேர்தல் நிலைப்பாட்டின் நோக்கம் குறித்து அவர் மிகவும் அக்கறை கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் பிஹார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் அல்லது குஜராத்தில் நடந்த தேர்தல்களின்போது நாங்கள் அவரைப் பார்க்கவில்லை.

பிஹார் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு கபில் சிபல் சென்றிருந்தால், அவர் காங்கிரஸின் நிலைப்பாட்டிற்குத் தனது பங்காக பிரச்சாரத்தைப் பலப்படுத்தி மேலும் நிரூபித்திருக்க முடியும். அவர் சொல்வது சரியானது என்றும் கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இதை எதையும் செய்யாமல் அவரது இந்த வெறும் பேச்சு எதுவும் சாதிக்காது. எதையும் செய்யாமல் பேசுவது கட்சியின் முக்கியமான நோக்கத்திற்குப் பயன்படாது''.

இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x