

கோவிட்-19 இறப்பு விகிதம் இந்திய நகரங்களிலேயே பெங்களூருவில் மிகக் குறைவு என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் புதிதாக 38,617 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 89.12 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று 474 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1.30 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
உலக அளவில் கரோனா அலை குறையாமல் மேலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு மெல்ல மெல்லக் குறைந்துவருவதாகவே மத்திய சுகாதாரத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கோவிட்-19 இறப்பு விகிதம் இந்திய நகரங்களிலேயே பெங்களூருவில் மிகக் குறைவு என கர்நாடக அமைச்சர் கே.சுதாகர் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது:
"செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பெங்களூருவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 3,36,880 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நகரில் குணமடைந்தோர் சதவீதம் 93.94 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 17,707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சதவீதத்தில் 4.93 ஆக உள்ளது. அவ்வகையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது''.
இவ்வாறு கர்நாடக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.