Last Updated : 18 Nov, 2020 10:02 AM

 

Published : 18 Nov 2020 10:02 AM
Last Updated : 18 Nov 2020 10:02 AM

ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து; கோவிட்-19 சவால்கள், பருவநிலை மாற்றம் குறித்து ஆலோசனை

அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் விரைவில், அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனுடன் பிரதமர் மோடி நேற்று இரவு தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினேன். அமெரிக்க அதிபராக அவர் தேர்வாகியுள்ளதற்காக வாழ்த்துத் தெரிவித்தேன்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவை ஸ்திரமாக வைத்திருப்பதில் இருவரும் பரஸ்பரம் உறுதி தெரிவித்துக் கொண்டோம். கோவிட்-19 சவால்கள், பருவநிலை மாற்றம், இந்திய - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் துணை அதிபராகத் தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி தனியாக வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அதில், "கமலா ஹாரிஸின் வெற்றி இந்திய அமெரிக்கச் சமூகத்தினருக்கு பெருமிதம் தரும் நிகழ்வு" எனப் பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி - ஜோ பைடன் உரையாடல் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வானது அமெரிக்காவின் ஜனநாயகப் பாரம்பரியத்தின் வலிமைக்கான சாட்சி என்று மோடி பாராட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது கடந்த 2014, 2016 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்தது குறித்தும் பிரதமர் மோடி அந்த உரையாடலில் நினைவுகூர்ந்ததாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு நன்றி தெரிவித்த பைடனின் அதிகாரிகள் குழு:

பிரதமர் மோடியின் வாழ்த்தைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது ஜோ பைடனின் அதிகாரிகள் குழு.

இந்தியா - அமெரிக்க நட்புறவை வலுப்படுத்துவதில் பைடன் ஆர்வமுடன் இருப்பதாகவும் அந்த நன்றி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "கோவிட் 19 அச்சுறுத்தலை எதிர்கொள்ளுதல், எதிர்காலத்தில் இதுபோன்ற சுகாதாரச் சவால்கள் ஏற்பட்டால் தற்காத்துக் கொள்ளுதல், பருவநிலை மாற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சர்வதேசப் பொருளாதாரச் சுணக்கத்திலிருந்து மீண்டெழுதல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் வளமையையும் உறுதிப்படுத்துதல் போன்ற விஷயங்களில் இந்தியாவுடன் பைடன் இணைந்து செயல்பட ஆர்வத்துடன் இருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடனுடன், இஸ்ரேல், சிலி, தென் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும் நேற்றைய தினம் தொலைபேசியில் உரையாடி வாழ்த்துத் தெரிவித்தனர்.

சீனாவை முந்திக்கொண்ட இந்தியா:

அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள பைடனுடன் பேசுவதில் சீனாவை முந்திக் கொண்டுள்ளது இந்தியா. இது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், ட்ரம்ப் பதவியிழக்க வேண்டுமென்பதில் சீனா வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நட்பு தொடருமா?

முந்தைய அதிபர் டொனால்ட் டர்ம்ப்புடன் பிரதமர் மோடி நட்புறவில் இருந்தார். தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றுகூட வாழ்த்தியிருந்தார். ட்ரம்ப்பின் பெரும்பாலான வெளியுறவுக் கொள்கைகளை ஆதரிப்பவராகவே மோடி இருந்தார்.

அமெரிக்காவில் ட்ரம்ப் ஏற்பாடு செய்த ஹவுடி மோடி நிகழ்ச்சியும், குஜராத்தில் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியும் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட நட்புறவின் அடையாளமாகவே விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், மோடி பைடனுடன் பேசியிருந்தாலும் ட்ரம்ப்புடன் இருந்ததுபோல் நட்புறவு தொடருமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x