Last Updated : 18 Nov, 2020 03:13 AM

 

Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி ஒப்பந்தம்

தமிழகத்தின் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் (ஓஎன்ஜிசி)மத்திய அரசு நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது.

நாடு முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ’ஒஏஎல்பி’ எனப்படும் திறந்தவெளி அனுமதி எனும் புதிய முறை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் (டிஜிஎச்), இதுவரையில் 4 ஏலங்கள் விட்டு, பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இவற்றில் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் 6 வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தமாகி உள்ளது.

இவற்றில் வேதாந்தா நிறுவனத்துக்கு 2, ஐஓசி 1, ஓஎன்ஜிசி.க்கு 3 ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 வட்டாரங்களிலும் நேரடியானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கு தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பு காரணம். இச்சூழலில், ஓஏஎல்பி.யின் 5-வது சுற்று ஏலம் நேற்று நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

மொத்தம் 11 வட்டாரங்களுக்கான இந்த ஒப்பந்தம், ஓஎன்ஜிசி.யுடன் 7 மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் 4 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஓன்என்ஜிசி.யின் 7-ல் ஒரு இடம் தமிழகத்தில் இடம் பெற்றுள்ளது.

இது, தமிழகத்தில் காவிரி படுகைக்கு கிழக்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில் உள்ளது. தமிழகத்தின் காவிரி படுகையில் பெரும்பான்மையான நிலப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் அதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் வ.சேதுராமன் கூறும்போது, ‘‘இதற்கு முன் கடலூரின் கடல் பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் எடுக்க 2016-ல் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் மீன் பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது ஆய்வு நிலையில் உள்ள போது கடலூரில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பனுக்கானக் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற விதிமுறைகளை மத்திய அரசு ரத்து செய்து அவற்றை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

ஐந்தாவது ஒஏஎல்பி முறையில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்த பரப்பளவு 19,789,04 சதுர கி.மீ ஆகும். இதில், தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் 4,064,22 சதுர கி.மீ இடம் பெற்றுள்ளது. மற்றவை ராஜஸ்தான் 2, குஜராத் 4, அசாம் 2, மகராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் நிலப்பகுதி மற்றும் கடல் பகுதிகளில் அமைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x