

12 ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உறங்கிக் கொண்டிருந்த நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றிய வழக்கில் நடிகர் சல்மான் கானிற்கு எதிராக 5 நட்சத்திர விடுதி வெயிட்டர் இன்று மும்பை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
மோலே பாக் என்ற இந்த வெயிட்டர், நீதிபதி தேஷ்பாண்டே முன்பு சாட்சியம் அளிக்கையில், காக்டெயில் மற்றும் ரம் ஆகியவற்றை சல்மான் கான் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு தான் சப்ளை செய்ததாக தெரிவித்தார்.
ஆனால் சல்மான் குடித்தாரா என்பது தனக்குச் சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அரசுத் தரப்பு வக்கீல் ஜகன்னாத் கெஞ்ச்ரால்கர், அவரை குடைந்து எடுத்து சல்மான் கான் அன்று குடித்திருந்தார் என்பதை நிரூபித்தார்.
"விடுதியில் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் யார் யார் குடித்தார்கள் என்பதை என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை" என்றார்.
மற்றொரு சாட்சியான போலீஸ் கான்ஸ்டபிள் லஷ்மண் மோர் கூறுகையில், "சல்மான் கானும் அவரது சகோதரர் சோகைலும் ரைன் பாருக்குச் சென்றனர். சகோதரர் சோகைல் நள்ளிரவில் வீடு திரும்பினார். ஆனால் காலை 3 மணியாகியும் சல்மான் திரும்பவில்லை, அப்போது ஒருவர் வந்து எங்களிடம் சல்மான் காரை நடைபாதைவாசிகள் மீது ஏற்றிய சம்பவத்தைக் கூறினார்" என்றார்.
2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாக 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெறுகிறது.