Last Updated : 17 Nov, 2020 04:35 PM

 

Published : 17 Nov 2020 04:35 PM
Last Updated : 17 Nov 2020 04:35 PM

தப்லீக் ஜமாத் வழக்கு: பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் மனநிறைவு தரவில்லை: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

கோப்புப்படம்

புதுடெல்லி

தப்லீக் ஜமாத் குறித்து வெறுப்புணர்வுக் கருத்துகளைப் பொய்யான செய்திகள் மூலம் பரப்பிய ஊடகங்கள் மீது கேபிள் டிவி சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், உங்களின் பிரமாணப் பத்திரம் மனநிறைவு தரவில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் மத மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இந்நிலையில் தப்லீஜ் ஜமாத் மத மாநாட்டில் பங்கேற்றவர்களால்தான் நாட்டில் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவியது என்று ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுகுறித்து ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அதில், “தப்லீக் ஜமாத் மத மாநாட்டின் மூலம்தான் கரோனா பரவியது என்று பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள். அந்தச் செய்தியை நிறுத்த உத்தரவிட வேண்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக தப்லீக் ஜமாத் மாநாடு நடந்தபோது, கரோனா வைரஸ் பரவியதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றம் சாட்டுகிறார்கள். அச்சமூட்டுகிறார்கள். இதுபோன்ற செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தப்லீக் ஜமாத் குறித்த செய்தியை ஒட்டுமொத்த ஊடகங்களும் வெளியிடக்கூடாது என்று தடைவிதிக்க மனுதாரர்கள் கோருகிறார்கள். இது குடிமக்களின் உரிமையையும், அறிவார்ந்த சமூகத்தில் பத்திரிகையாளர்களின் உரிமையையும் அழிப்பதாக அமையும்.

ஆட்சேபத்துக்குரிய எந்தவிதமான ஆதாரபூர்வமான செய்திகள் எந்த சேனல்கள், பத்திரிகைகளிலும் வராத நிலையில், எந்த உறுதியான தகவலும் இல்லாத நிலையில், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” எனத் தெரிவித்தது.

கடந்த அக்டோபர் மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய ஒளிபரப்புத்துறையின் கூடுதல் செயலாளருக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கடும் கண்டனம் தெரிவித்தார். பிரமாணப் பத்திரத்தில் தேவையில்லாத கருத்துகளையும் முட்டாள்தனமான வாதங்களையும் கூறியுள்ளார் என்று கோபமாக நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து, மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சொலிசிட்டர் ஜெனரலைப் பார்த்து, “ நீங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் எங்களுக்கு மனநிறைவைத் தரவில்லை. கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். பொய்யான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்க ஒரு அமைப்பு முறையை உருவாக்கப் பரிசீலிக்க வேண்டும்.

ஆதலால், முதலில் நீங்கள் முறைப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை. நீங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நாங்கள் கேட்ட இரு முக்கியமான கேள்விகளுக்குப் பதில் இல்லை. இதுபோன்ற பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக்கூடாது மேத்தா. உங்கள் பதில் எங்களுக்கு மனநிறைவைச் சிறிதும் தரவில்லை.

நாங்கள் கேட்பதெல்லாம், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது மட்டும்தான். ஆனால், உங்களின் பிரமாணப் பத்திரத்தில் அது இல்லை.

இதுபோன்ற பொய்யான கருத்துகளோடு செய்திகள் வெளியிடப்பட்டால் அவற்றை எவ்வாறு கையாள்வது? அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவேளை அவ்வாறு எந்த ஒழுங்குமுறையும் இல்லாவிட்டால், புதிதாக உருவாக்குங்கள். ஒழுங்குமுறையை வகுக்கக் கோரி செய்தி ஒளிபரப்பாளர்கள் தர ஆணையத்திடம் வழங்க முடியாது” எனத் தெரிவித்தனர்.

இதற்கு துஷார் மேத்தா, “கேபிள் டிவி சட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” என்று பதில் அளித்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி பாப்டே, “எத்தனை முறை கேபிள் டிவி சட்டத்தின் கீழ் எத்தனை ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எங்களிடம் கூறுங்கள். ஏன் ஒரு ஒழுங்குமுறை அமைப்பை அரசு உருவாக்கவில்லை என்பதுதான் கேள்வி.

கேபிள் டிவி சட்டத்தின் மூலம் எவ்வாறு தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை கட்டுப்படுத்த முடியும் என்பதைக் கூறுங்கள். இதுபோன்ற புகார்களை எவ்வாறு கையாள்வது எனத் தெரிவியுங்கள். வழக்கை அடுத்த 3 வாரத்துக்கு ஒத்தி வைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x