Published : 24 Oct 2015 08:29 AM
Last Updated : 24 Oct 2015 08:29 AM

கோலாகலமாக நடந்த மைசூரு தசரா விழா நிறைவு

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு யானைகள் ஊர்வலம் மற்றும் தீப்பந்த ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. கர்நாடக பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

கடந்த 1610-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் மைசூரு தசரா திருவிழா, இந்த ஆண்டு கடந்த 13-ம் தேதி விவசாயி புட்டய்யா என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 11 நாட்களும் கிராமிய கலை பெருமையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன‌.

தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று விஜய தசமியை முன்னிட்டு நண்பகல் 12.15 மணிக்கு மைசூரு அரண்மனையில் உள்ள நந்திகொடிக்கு முதல்வர் சித்தராமையா பூஜை செய்து தசரா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து வ‌ரலாற்று சிறப்பு மிக்க 'ஜம்போ சவாரி' என்று அழைக்கப்படும் யானை ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது அர்ஜுனா என்ற யானை 5-வது முறையாக 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியின் சிலையை சுமந்து ஊர்வலமாக சென்றது.

இதை பின்தொடர்ந்து துர்கா பரமேஸ்வரி, கோபாலசாமி, பிரசாந்தா, ஹர்ஷா, அபிமன்யு, சரளா, பலராமன் ஆகிய யானைகள் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக வலம் வந்தன‌.

கோலாகலமாக நடைபெற்ற ஜம்போ சவாரியை காண சிறப்பு விருந்தினர்களாக‌ மைசூருவின் புதிய மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரும், மறைந்த  கண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மனைவியும், மகாராணியுமான‌ பிரமோதா தேவியும் பங்கேற்றனர். மேலும் அரண்மனை வளாகத்தில் 15 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கர்நாடக அமைச்சர்கள், அதிகாரிகள், மன்னர் குடும்ப உறவினர்கள், சிறப்பு விருந்தினர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜம்போ சவாரியை கண்டு களித்தனர்.

சுமார் 5.5 கி.மீ தூரம் நடை

பெற்ற தசரா ஊர்வலத்தில் கர்நாடக அரசின் சாதனைகள், மாநில வரலாறு, இலக்கிய பெருமை, பண்பாட்டு சின்னங்கள் ஆகியவற்றை விளக்கும் 23 அலங்கார ஊர்திகளும் அணிவகுத்தன.

மேலும் கர்நாடக‌ காவல் துறையினரின் பாரம்பரியமிக்க மேள தாள இசை கச்சேரியும், 66 கிராமிய கலைக் குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது தவிர பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், புலி வேஷம், கோலாட்டம், டோளு குனிதா, டொல்லு குனிதா, வீரகாசா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா மாலை 7 மணிக்கு கர்நாடக காவல்துறையினரின் தீப் பந்த அணிவகுப்பை (டார்ச் லைட் பரேட்) தொடங்கி வைத்தார். அப்போது தீப்பந்தங்களை ஏந்தி காவலர்கள் அலங்கரிக்கப்பட்ட குதிரைகளின் முன்பாக நின்று தீப்பந்தம் ஏந்தி கம்பீர அணிவகுப்பை நிகழ்த்தினர்.

இந்த கண்கவர் தசரா ஊர்வலத்தை வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். கோலாகலமாக 11 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மைசூரு தசரா திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 ஆயிரம் போலீஸாருக்கு அரண்மனை வளாகத்தில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x