கரோனா அதிகரிப்பால் டெல்லியில் மீண்டும் லாக்டவுன்: மத்திய அரசிடம் அனுமதி கோரினார் அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா வைரஸால், ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும் காய்கறிச் சந்தைப் பகுதிகளில் மீண்டும் சில நாட்களுக்கு லாக்டவுனைக் கொண்டுவர மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் 3-வது அலை வீசுகிறது. டெல்லியில் மட்டும் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 7,713 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் டெல்லியல் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அறிந்து உடனடியாக 750க்கும் மேற்பட்ட ஐசியு படுக்கைகளை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். டெல்லி அரசின் அனைத்து அமைப்புகளும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரு மடங்கு உழைத்து வருகின்றன.

நான் மக்களிடம் கேட்பது, தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். சமூக விலகலைப் பின்பற்றுங்கள் என்பதுதான். டெல்லியில் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள், சந்தைப் பகுதிகளில் மட்டும் தேவைப்பட்டால் லாக்டவுனைக் கொண்டு வருவதற்கான அனுமதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் குறைந்தவுடன், திருமணங்கள், கூட்டங்கள், விசேஷங்கள் ஆகியவற்றில் மக்கள் பங்கேற்கும் அளவை 200 பேருக்கு மேல் அதிகரித்தோம்.

இப்போது அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றுவிட்டோம். 50 நபர்களுக்கு மேல் திருமணம், விஷேசம், கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதியில்லை. இந்த முடிவு தற்போது துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in