

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும 12-ம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்சி மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய சிபிஎஸ்இக்கும், டெல்லி அரசுக்கும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்தது.
டெல்லியைச் சேர்ந்த சோசியல் ஜூரிஸ்ட் எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், “ கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் தொழில் முடக்கம், வர்த்தகம் பாதிப்பு, வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு போன்றவை நடந்துள்ளது. இதனால் ஏராளமான பெற்றோர் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும், தேர்வுக்கட்டணத்தையும் செலுத்த முடியாத சிரமத்தில் இருக்கிறார்கள்.
ஆதலால், பெற்றோர்கள் சந்தித்துவரும் நிதிப்பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு நடப்புக் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்சி மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய சிபிஎஸ்இக்கும், டெல்லி அரசுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், நீதிபதிகள் ஆர் சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “ இந்த மனு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இருக்கிறது.
எவ்வாறு ஓர் அரசுக்கு நீதிமன்றம் இந்த விஷயத்தை செய்யுமாறு உத்தரவிட முடியும். அரசுக்கு நீங்கள்தான் இந்த விஷயத்தை எடுத்துக்கூற வேண்டும். இந்த மனுவை விசாரிக்க இயலாது” எனத் தெரிவித்தனர்.
ஏற்கெனவே இதேபோன்ற மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீது உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், “ டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, சிபிஎஸ்இ அமைப்பும் இந்த மனுவை பரிசீலித்து, சட்டம், விதிமுறைகள், ஒழுங்குவிதிகள், அரசின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு முடிவு செய்து அடுத்த 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.