

டெல்லி காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு, 2020 (தாள்-1) கம்யூட்டர் முறையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தவுள்ளது.
தென்மண்டலத்தில் இந்த தேர்வு 2020 நவம்பர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை, தேர்வு தேதிக்கு 4 நாட்கள் முன்பிலிருந்து, தேர்வு தேதி வரை, எஸ்எஸ்சி இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தகவல்கள், விண்ணப்பதாரர்களுக்கு, எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மண்டலத்தில், இந்த தேர்வுக்கு 57383 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, மற்றும் விசாகப்பட்டினம், தெலங்கானாவில் ஐதராபாத் மற்றும் வாராங்கல், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 20 இடங்களில் இந்த தேர்வு நடக்கும்.
கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், செல்போன், ப்ளூ டூத் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்படாது.
இ-நுழைவுச் சீட்டு, அதில் குறிப்பிட்டுள்ளபடி அசல் அடையாள அட்டை ஆகியவை இன்றி விண்ணப்பதாரர்கள், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண் 044-28251139 மற்றும் செல்போன் எண்: 9445195946 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கோவிட்-19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்வாணையம் எடுத்துள்ளது. தேர்வுகளை பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்கு இ-நுழைவுச் சீட்டில் உள்ள அறிவுறுத்தல்களை விண்ணப்பதாரர்கள் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு, சென்னையில் உள்ள தென் மண்டல எஸ்எஸ்சி இயக்குனர் கே. நாகராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.