

டெல்லியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என சந்தேகப்படக்கூடிய இருவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
டெல்லியின் சாரே காலேகான் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் கூறுகையில் “ சாரே காலே கான் பகுதியில் உள்ள மில்லினியம் பார்க் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் இருவர் சுற்றிக்கொண்டிருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியல் ரோந்தில் இருந்த போலீஸாரை அனுப்பி இருவரையும் பிடித்து விசாரித்தோம்.
அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களைச் சோதனையிட்டபோது அவர்களிடம் 2 கைத் துப்பாக்கிகளும், 10 தோட்டாக்களும் இருந்ததைக் கண்டு போலீஸார் அவர்களை பிடித்துச் சென்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஜம்மு காஷ்மீர் , பாரமுல்லா மாவட்டம், பாலா மொஹல்லா பகுதியைச் சேர்ந்த சனானுல்லா மகன் அப்துல் லத்தீப் மிர் என்பதும், மற்றொருவர் குப்வாரா மாவட்டம், ஹத் முல்லா கிராமத்தைச் சேர்ந்த பசீர் அகமதுவின் மகன் முகமது அஷ்ரப் கதானா என்பதும் தெரியவந்தது. இருவருமே 22 வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் தாக்குதல் நடத்திவிட்டு, இருவரும் நேபாளம் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது” எனத் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகள் டெல்லியில் தாக்குதல் நடத்த தீட்டியிருந்த சதித்திட்டத்தையும் போலீஸார் முறியடித்தனர். தவுலா குவான் பகுதியில் ஒருவரிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் 15 கிலோவை போலீஸார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.