Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

டிஜிட்டல் மீடியாக்களில் வெளிநாட்டு முதலீடுகளை 26% குறைக்க வேண்டும்: மத்திய அரசு காலக்கெடு அறிவிப்பு

புதுடெல்லி

செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ள டிஜிட்டல் மீடியா நிறுவனங்களில், வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீத அளவுக்குக் குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அந்நிய முதலீட்டு வரம்பு குறைக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் மீடியா நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஒரு மாத அவகாசம்

26 சதவீதத்துக்கும் குறைவாக அந்நிய முதலீடு உள்ள ஊடகங்கள் அதுபற்றிய விவரங்களையும், எந்த அளவுக்கு பங்குகள் உள்ளன என்ற விவரமான அறிக்கையையும் ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் இயக்குநர்கள், நிறுவன மேம்பாட்டாளர்கள், பங்குதாரர்கள் குறித்த விவரத்தையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் செய்தி மற்றும் நடப்பு விவகாரம் குறித்த செய்திகளை வெளியிடும் டிஜிட்டல் மீடியாக்களில் அந்நிய முதலீடு 26 சதவீதம் என்ற வரம்பு வரையறுக்கப்பட்டது. சுமார் ஓராண்டுக்குப் பிறகுதான் இதை செயல்படுத்த அரசு முன்வந்துள்ளது. இதற்கான உத்தரவில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலர் அமரேந்திர சிங் கையெழுத்திட்டுள்ளார்.

பணி நியமன கட்டுப்பாடு

இதேபோல அந்நிய முதலீட்டை எதிர்நோக்கும் நிறுவனங்கள் அதுகுறித்து முன்னதாகவே அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதேபோல 60 நாட்களுக்கு மேலாக பணியில் ஈடுபடுத்தப்படும் வெளிநாட்டவர் குறித்த விவரத்தையும் அவரது நியமனத்தின் போது தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ள இயக்குநர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்டவர் பற்றிய விவரத்தை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவரை நியமிப்பதாக இருந்தால் அதற்குரிய அனுமதி பெற்ற பிறகே அவர் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x