

பிஹார் மாநில முதல்வராகத் தொடர்ந்து 4-வது முறையாகவும், கடந்த 20 ஆண்டுகளில் 7-வது முறையாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் பாகு சவுகான் பதவியேற்பு பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா , பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.
பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதில் பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் வென்றன. கடந்த 2005-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் ஜேடியு மிகவும் மோசமாகச் செயல்பட்டு 41 இடங்களில் மட்டுமே இந்த முறை வென்றது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி 110 இடங்களில் வென்றது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.
பாட்னாவில் நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பிஹார் என்டிஏ தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தொடர்ந்து 4-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்த நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க உரிமை கோரி நாளை (இன்று) பதவி ஏற்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.
துணை முதல்வர்களாக பாஜக எம்எல்ஏக்கள் தாரிகிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் பதவி ஏற்றனர்.
ஜேடியு கட்சியின் சார்பில் விஜய் குமார் சவுத்ரி, விஜேந்திர பிரசாத் யாதவ், அசோக் சவுத்ரி, மேவா லால் சவுத்ரி ஆகியோரும், முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் சுமன், விஐபி கட்சி சார்பில் முகேஷ் சாஹி ஆகியோரும், பாஜக சார்பில் மங்கள் பாண்டே, அமரந்திர பிரதாப் சிங் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
69 வயதாகும் நிதிஷ் குமார் கடந்த 2005 நவம்பரில் இருந்து பிஹார் முதல்வராக தொடர்ந்து இருந்து வருகிறார். இதில் 2014-15ஆம் ஆண்டு மட்டும் சட்டப்பிரச்சினை காரணமாக ஜித்தன்ராம் மாஞ்சியை முதல்வராக நிதிஷ் குமார் அமர்த்தினார்.
பிஹார் முதல்வராக இருந்த ஸ்ரீகிருஷ்ணா சிங் சுதந்திரம் பெற்றதிலிருந்து கடந்த 1961வரை தொடர்ந்து முதல்வராக இருந்தார். அவரின் சாதனையை நிதிஷ் குமார் முறியடித்துவிட்டார்.