

பத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ.16ஆம் நாள்தான் தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.
பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி:
''தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள். நமது மாபெரும் தேசத்தின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த நம்முடைய ஊடக சகோதரத்துவம் அயராது உழைத்து வருகிறது.
பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதில் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. அதேநேரம் அதன் குரல்வளையை நெரிப்பவர்களைக் கடுமையாக எதிர்க்கிறது.
கோவிட்-19 காலங்களில் ஊடகங்களின் குறிப்பிடத்தக்க பங்கை நான் பாராட்டுகிறேன்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.