

டெல்லியில் கோவிட்-19 மூன்றாவது அலை, உச்சத்தைக் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் ஊரடங்கு இல்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பாவில் கரோனா வைரஸ் மீண்டும் இரண்டாம் அலையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கோவிட்-19 தாக்கம் குறைந்துவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்தியாவில் இதுவரை 88,45,127 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 82,49,579 பேர் இந்நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1,30,128 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43,851 ஆகும். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டெல்லி நகரில் மட்டும் மூன்றாவது அலை வீசுவதாகக் கூறப்பட்டது. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பண்டிகைக் காலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பு, குளிர்காலம் தொடர்பான சுவாசப் பிரச்சினைகள் போன்றவற்றால் ஒரு நாளைக்கு சுமார் 15,000 பேர் அளவில் புதியதாக கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு டெல்லி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
எனினும் தற்போது கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தைக் கடந்துவிட்டதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று கூறியதாவது:
''டெல்லியைப் பாதித்த கரோனா வைரஸின் மூன்றாவது அலை சமீப நாட்களில் நகரத்தில் உச்சம் அடைந்தது. ஆனால், தற்போது அது நம்மைக் கடந்துபோய்விட்டது.
அக்டோபர் 28 ஆம் தேதி முதல் தினசரி உயர்வு முதல் தடவையாக 5,000 எண்ணிக்கையைக் கடந்தது. கடந்த புதன்கிழமை 8,000 எண்ணிக்கையை அடைந்தது. டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தாலும் மூன்றாவது அலையின் உச்சத்தைக் கடந்துவிட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.
கரோனா வைரஸின் மூன்றாவது அலை நகரத்தில் உச்சம் கடந்துபோய்விட்டதால் டெல்லியில் இனி மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை''.
இவ்வாறு டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.