Published : 16 Nov 2020 12:45 PM
Last Updated : 16 Nov 2020 12:45 PM

எல்லாம் நன்றாக இருப்பதாக தலைமை நினைக்கிறது; வலுவான மாற்றுக் கட்சியாக காங்கிரஸை மக்கள் நினைக்கவில்லை: கபில் சிபல் ஆதங்கம்

எல்லாம் நன்றாக உள்ளன என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. ஆனால், பிஹார் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. சுயபரிசோதனை செய்துகொள்ளும் காலம் முடிந்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மகா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றது. ஆனால், கடந்த தேர்தலில் 27 இடங்களில் வென்றதைவிட இந்த முறை காங்கிரஸ் நிலைமை மோசமானது. அதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைமை தேவை, ஆக்கபூர்வமான, சுறுசுறுப்பான தலைமை தேவை என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர்.

அதன்பின் காங்கிஸ் நிர்வாகக் குழுவில் சோனியா காந்தி அதிரடியாக மாற்றம் செய்தார். இருப்பினும் அதன்பின் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

இந்நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''காங்கிரஸ் கட்சியில் உள்ள அனுபவமான தலைவர்கள், அனுபவமான மனநிலை உள்ளவர்கள், அரசியல் களச்சூழலை அறிந்தவர்கள் கட்சியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது. நம்மிடம்தான் பதில் இருக்கிறது. துணிச்சலுடன், விருப்பத்துடன் நாம் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் பல நிலைகளில் பல விஷயங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக, கட்சி சார்ந்த விஷயங்கள், ஊடகங்களில் உரையாடுவது, மக்கள் யார் பேச்சைக் கேட்க விரும்புகிறார்களோ அவர்களை நிறுத்துவது, சுறுசுறுப்பான, சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை வழங்குதல் போன்றவை அவசியம்.

பிஹார் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மோசமாகத்தான் இருந்தது. பல இடங்களில் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை. உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் 2 சதவீத வாக்குகள்தான் இடைத்தேர்தலில் கிடைத்தன.

காங்கிரஸ் கட்சிக்குள் என்ன தவறு நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அமைப்புரீதியாக என்ன தவறு இருக்கிறது என்பதும் தெரியும், எங்களிடமே பதிலும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும் அனைத்துப் பதில்களும் தெரியும். ஆனால், அவர்கள் அதை ஏற்க விருப்பமில்லை.

அனைத்தும் நன்றாக உள்ளன என்று நம்புகிறார்கள். இயல்பில் உள்ள சூழலை அவர்களை ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும்.

பிஹார் தேர்தல் முடிவைப் பார்த்தபின், இந்த தேசத்தின் மக்கள் காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது''.

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x