

ஒடிசா மாநிலத்தில் நீர்த்தேக்கத்தில் உதவியாளர் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல மாதங்கள் கடந்த நிலையில் கலெக்டர் உள்ளிட்ட சில அலுவலக ஊழியர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒடிசாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மால்கன்கிரி கலெக்டரின் பி.ஏவாக பணியாற்றிவந்த தேவநாராயண் பாண்டா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல், டிசம்பர் 28-ம் தேதி, மால்கன்கிரி நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கத்தில், அவர் காணாமல் போன ஒரு நாளின் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில், பாண்டா தற்கொலை செய்து கொண்டார் என்று சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் நடந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, மால்கன்கிரி கலெக்டர் மனிஷ் அகர்வால் மற்றும் அவரது அலுவலக ஊழியர்கள் சிலரால் அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டினார்.
பிஏ குடும்பத்தினர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தபோதும், அவர்கள் அளித்த புகார் மனு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் மனமுடைந்த பாண்டாவின் குடும்பத்தினர் ஒடிசா மனித உரிமைகள் ஆணையம் சென்று புகார் அளித்தனர்.
பிஏ கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணையம் மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது. அதன்படி, காவல் துறைத் தலைவர்மர்ம மரணம் குறித்து ஒடிசாவின் தென்மேற்கு சரகத்தில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து வந்தார்.
பாண்டாவின் குடும்ப உறுப்பினர்களும் மாவட்ட நீதிமன்றத்தில் மால்கன்கிரி கலெக்டர் மற்றும் மூன்று பேருக்கு எதிராக ஒரு கொலை வழக்கை பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டினர்.
மால்கன்கிரி துணைப்பிரிவு நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் உதவியாளரை கொலை செய்ததோடு, ஆதாரங்களை அழித்ததாகவும் கலெக்டர் மனிஷ் அகர்வால் மீது குற்றச்சாட்டப்பட்டு கொலை வழக்குப் பதிவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிஷைத் தவிர கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த மூன்று ஊழியர்கள் மீதும் இதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.