

கேரள சிறையில் கைதிகள் தயாரித்த ரப்பர் காலணி, விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
கேரளாவில் சிறையில் உள்ள கைதிகளை, சமூக நீரோட்டத்தோடு இணைக்கவும், அவர்களுடைய மறுவாழ்வுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை சிறைத் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ் சிறை கைதிகள் விலை குறைந்த தரமான உணவு வகைகளைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அதேபோல் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பூஜாபுரா மத்திய சிறையில் ரப்பர் காலணிகளைத் தயாரிக்கும் புதுப் பிரிவை சிறை வளாகத்திலேயே அதிகாரிகள் ஏற்படுத்தித் தந்தனர். அதன் மூலம் வண்ண வண்ண ரப்பர் (ஹவாஸ்) காலணிகளை உருவாக்கி வருகின்றனர். கைதிகள் காலணி தயாரிக்கும் புகைப்படங்களை சிறை அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்டனர்.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் நிர்மலானந்தன் நாயர் கூறும்போது, ‘‘கைதிகள் தயாரிக்கும் ஒரு ஜோடி காலணி ரூ.80-க்கு விற்கப்படும். இவை விரைவில் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். இதற்கு ‘சுதந்திர நடை’ (பிரீடம் வாக்) காலணி என்று பெயரிடப்பட்டுள்ளது’’ என்றார்.கைதிகள் தயாரித்த ரப்பர் காலணிகளின் விற்பனையை சிறைத் துறை டிஜிபி ரிஷி ராஜ் சிங் கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பூஜாபுரா சிறையில் உள்ள கைதிகளில் பெரும்பாலானோர் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இதனால், கைதிகள் மூலம் இந்த சிறை வழங்கிய சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், சுகாதாரத் துறை அதிகாரிகள், ஊழியர்களின் முழு ஒத்துழைப்பால், தற்போது சிறையில் கைதிகள் உட்படயாருக்கும் கரோனா தொற்று இல்லை. கரோனா தொற்று இல்லாத சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால், இயற்கை முறையில் காய்கறிகள் உற்பத்தி, உணவு தயாரிப்பு போன்ற அனைத்துப் பிரிவுகளும் இயங்கத் தொடங்கிவிட்டன என்று கண்காணிப்பாளர் நிர்மலானந்தன் கூறினார்.
உணவுப் பொருட்களை ஆன்லைனில் விநியோகம் செய்வதற்கு, ‘ஸ்விக்கி’யுடன் சிறைத் துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.