

இந்தியப் பகுதிக்குள் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்று எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, குப்வாரா, பண்டிப்போரா ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் பிஎஸ்எப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் 4 ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். உரி, நவ்காம், கேரன், குரேஸ் ஆகிய பகுதிகளில் நடந்த இரு தரப்பு மோதலில் ஒரு பெண், 7 வயது சிறுவன் உட்பட 4 அப்பாவி மக்களும் உயிரிழந்தனர்.
குப்வாரா மாவட்டத்தின் நவ்காம் பகுதியில் இறந்த பிஎஸ்எப் சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் தோபால், உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பெற்றோரும் மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இதுபோல் பாகிஸ்தான் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் அசாமைச் சேர்ந்த ஹர்தர் சந்திர ராய் (38), நாக்பூரைச் சேர்ந்த பூஷண் ரமேஷ் ராவ் (28), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபோத் கோஷ் (22), மகாராஷ்டிராவை சேர்ந்த ஜே.ஆர்.ராம்சந்திரா (20) ஆகியோரின் உடல்களுக்கும் ராணுவ தரப்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிஎஸ்எப் ஐஜி ராஜேஷ் மிஸ்ரா கூறியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எந்தவொரு காரணமும் இன்றி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இந்திய பாதுகாப்பு படையினரின் நிலைகள் மட்டுமின்றி பொது மக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் அவர்கள் இடைவிடாமல் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவம் மற்றும் பிஎஸ்எப் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. நமது வீரர்கள் துணிவுடன் சண்டையிட்டனர்.
இரு தரப்பு மோதலில் சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் தோபால் உள்ளிட்ட சிலரை நாம் இழந்தோம். பாகிஸ்தானுக்கு நாம் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளோம். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஏவுதளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவக் காத்துள்ளனர். ஒவ்வொரு ஏவுதளத்திலும் 250-300 தீவிரவாதிகள் உள்ளனர். அவர்கள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த முயற்சிகளை ராணுவமும் பிஎஸ்எப் வீரர்களும் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர்.இவ்வாறு ஐஜி ராஜேஷ் மிஸ்ரா கூறினார்.
கடந்த 1947 முதல் இந்தியாவுடன் 3 முறை போரிட்டு பாகிஸ்தான் தோல்வி கண்டது. கடந்த 2003-ல் எல்லை நெடுகிலும் அமைதியை பாரமரிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. எனினும் இந்த உடன்பாட்டை மீறி வருகிறது. கடந்த 2016-ல் இரு தரப்பு உறவுகள் சீர்குலைந்த பிறகு பாகிஸ்தான் அத்துமீறல் தீவிரம் அடைந்தது. இந்திப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊருடுவ வசதியாக, இந்திய வீரர்களின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.