ரூ.200 கோடி ஜிஎஸ்டி மோசடி: பெங்களூருவில் 4 தொழிலதிபர்கள் கைது

ரூ.200 கோடி ஜிஎஸ்டி மோசடி: பெங்களூருவில் 4 தொழிலதிபர்கள் கைது
Updated on
1 min read

ஜிஎஸ்டி வரிக்கான ரசீதுகளை போலியாக தயாரித்து ரூ.200 கோடி மோசடி செய்ததாக 4 தொழிலதிபர்கள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் போலியாக ஜிஎஸ்டி வரி ரசீது மற்றும் மின்னணுரசீதுகள் தயாரித்து மோசடியில் ஈடுபடுவோர் குறித்து புகார்கள் வந்தன.

இதன்பேரில், ஜிஎஸ்டி மோசடி தடுப்பு பிரிவு (பெங்களூரு மண்டலம்) அதிகாரிகள், கடந்த ஒரு வாரமாக சந்தேகத்துக்கிடமான தொழிலதிபர்களை தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர். இதில், 4 தொழிலதிபர்கள் ரூ.200 கோடி அளவுக்கு போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி வரியில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதில், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் கமலேஷ் மிஸ்ரா என்பவர் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏழை பட்டதாரிகளின் ஆதார், பான் அட்டையை வைத்து நாடு முழுவதும் போலியாக 23 நிறுவனங்களை தொடங்கியது கண்டறியப்பட்டது.

ஜிஎஸ்டி வரிச்சலுகை பெறுவதற்காக போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் பெயரில் ரசீதுகளை கமலேஷ் மிஸ்ரா தயாரித்துள்ளார்.

இந்த போலி நிறுவனங்களின் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொண்டு, ரூ.500 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை செய்துள்ளார். இதில் ரூ.80 கோடிஜிஎஸ்டி வரி மோசடி நடந்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் பி.கிருஷ்ணய்யா தன் ‘ஜம்ப் மங்கி ப்ரோமோஷன்' நிறுவனத்தின் மூலம் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். சீனாவை சேர்ந்த கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து ரூ.53 கோடி போலி ரசீதுகள் தயாரித்துள்ளார். இது தொடர்பாக ‘வி சாட்' தகவல்களை பரிமாறிக்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதே போல, பென்ஸ்டர் பவர்டெக்னாலஜியின் இயக்குநர் சுரேஷ் மேத்தா போலி ரசீதுகள்மூலம் ஜிஎஸ்டி வரியில் ரூ.12 கோடி மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக அவரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

மேலும் க்வஜா நிறுவன உரிமையாளர் ஹனீப் முகமது போலிரசீதுகள் மூலம் ரூ.10 மோசடிசெய்தது தெரியவந்துள்ளது. இவருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் முக்கியஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் பெங்களூருவில் ஜிஎஸ்டி வரிமோசடியில் ஈடுபட்ட 4 தொழிலதிபர்கள் மீதும் ஜிஎஸ்டி வரி மோசடிசட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் ரூ.1000 கோடிக்கு வருமானம் சம்பாதித்துள்ளனர். அதில் ரூ.200 கோடி போலி ரசீதுகள் மூலம் மோசடி செய்துள்ளனர். பெங்களூரு மண்டலத்தில் நடந்த மிகப்பெரிய மோசடி இதுதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in