

‘குமாரமங்கலம் பிர்லாவின் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்க, என் செல்வாக்கை பயன்படுத்த முயற்சிக்கவில்லை’’ என்று சிபிஐ அதிகாரிகளிடம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின்போது குமாரமங்கலம் பிர்லாவின் `ஹிண்டால்கோ’ நிறுவனத்துக்கு ஒடிசாவில் உள்ள `தலபிரா-2’ சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரி துறையையும் கவனித்து வந்ததால் அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வலியுறுத்தினார்.
இந்நிலையில், மன்மோகன் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர் கூறியதாவது:
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அளிக்க நான் முயற்சிக்கவில்லை. இதுதொடர்பாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. என் செல்வாக்கை பயன்படுத்தவும் முயற்சிக்கவில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பிர்லா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரின் கடிதங்களை கவனமாக ஆய்வு செய்து முடிவெடுக்க நான்தான் நிலக்கரி துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தேன்.
அமைச்சகம் எடுத்த முடிவுக்கு நான் அனுமதி வழங்கினேன். நிலக்கரி துறை அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற முறையில் பிர்லா, பட்நாயக் கடிதங்களை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தேன். அவ்வளவுதான். தவிர நிர்வாக முடிவுகளில் என் செல்வாக்கை பயன்படுத்தவில்லை. மேலும் பிரதமர் பதவியில் இருந்தபோது பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய இருந்தது. அதனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கான எல்லா விதிமுறைகளை தெரிந்து வைத்து கொள்வதும், அவற்றை நினைவுபடுத்தி பார்ப்பதும் நடைமுறைக்கு முடியாத விஷயம்.
இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதன்பின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மன்மோகன் சிங், பிர்லா, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் ஆகியோருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இடைக்கால தடை விதித்தது.