Last Updated : 15 Nov, 2020 05:30 PM

 

Published : 15 Nov 2020 05:30 PM
Last Updated : 15 Nov 2020 05:30 PM

அச்சத்தில் பொதுமக்கள்; காஷ்மீரை விட தீவிரவாதிகளின் மையமாக மாறிவருகிறது மேற்குவங்கம்: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்.

வடக்கு 24 பர்கானாஸ் (மேற்கு வங்கம்)

பொது மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் காஷ்மீரை விட அதிக அளவில் தீவிரவாதிகளின் மையமாக மேற்குவங்கம் மாறிவருவதாகவும் பாஜக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஞாயிற்றுக்கிழமை வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பராநகருக்கு வருகை தந்தார். பாராநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சா சக்ரா' எனப்படும் தேநீர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:

அலிபுர்துவாரில் இருந்து (மேற்கு வங்கத்தின் வட பகுதி) ஆறு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மாநிலத்தின் பல இடங்களில் ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்று பங்களாதேஷுக்கு அனுப்பப்படுவதாகவும் பங்களாதேஷ் தலைவர் கலீடா ஜியா கூட கூறியுள்ளார்.

இந்த மாநிலம் தேச விரோதிகளின் மையமாக மாறியுள்ளது. அவர்கள் வேறு இடங்களிலிருந்து மேற்கு வங்கத்திற்கு வந்து தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தின் நிலைமை இப்போது காஷ்மீரை விட படுமோசமாக உள்ளது. மாநிலம் தீவிரவாதிகள் மற்றும் தேச விரோதிகளின் மையமாக மாறிவிட்டது.

மேற்கு வங்க மக்கள் அச்ச நிலையில் வாழ்கிறார்கள். எனது பெயர் கூட தேச விரோதிகள் வைத்துள்ள கொலைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியிருந்த அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஜெய்கானில் நான் தாக்கப்பட்டேன்.

இந்த சம்பவத்தின் வீடியோவை நீங்கள் கவனமாகப் பார்த்தால், அவர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அவர்கள் தோற்றத்தின் மூலம் நீங்கள் அடையாளம் காணலாம். மேற்கு வங்கத்தில் ஏராளமான ரோஹிங்கியாக்களும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிக்கும் பிற ஊடுருவல்காரர்களும் உள்ளனர்.

ஒரு சில அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கும் சமூக விரோத சக்திகளுக்கும் தங்குமிடம் தருவது மிகவும் ஆபத்தானது.

எவ்வாறாயினும், மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டாக சேர்ந்து பாஜகவுக்கு எதிராக போட்டியிட்டாலும் மக்களைப் பொறுத்தவரை எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிந்துவைத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் அடுத்த தேர்தலில் போட்டியிட ஏஐஎம்ஐஎம்இன் தலைவர் அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார், பல விஷயங்கள் நடக்கலாம். பல அரசியல் கட்சிகள் இங்கு வந்து போட்டியிடுகின்றன. அது பாஜகவுக்கு ஒரு பொருட்டல்ல. எங்கள் கட்சி வாக்கெடுப்புகளை நடத்த ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 45 சதவீத மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

அவர்கள் எங்கள் கட்சிமீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். டி.எம்.சி, சிபிஐ (எம்), காங்கிரஸ், எய்ஐஎம், அனைத்து கட்சிகளும் ஒன்றிணையலாம். வளர்ச்சியை விரும்பும் கட்சி ஒருபுறம் இருக்கும், அமைதியின்மையை உருவாக்க விரும்பும் கட்சிகள் எல்லாம் மற்றொரு பக்கத்தில் இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x