மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது இந்துத்துவாவிற்கு கிடைத்த வெற்றி அல்ல: பாஜகவுக்கு சஞ்சய் ராவத் பதில்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் : கோப்புப்படம்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் : கோப்புப்படம்
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்களை திறக்கும் அரசின் முடிவு என்பது இந்துத்துவாவிற்கு கிடைத்த வெற்றி அல்ல. யாருக்கும் கிடைத்த வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் பாஜகவுக்கு பதில் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கரோனா வரைஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அடைக்கப்பட்டன. 8 மாதங்களாகத் திறக்கப்படாத நிலையில் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று வெளியிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இல்லாத கோயில்கள் திறக்கப்படும் நேரம் குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம். பக்தர்கள் சமூக விலகலைக் கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதி்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பாஜக எம்எல்ஏ ராம் காதம், நேற்று அளித்த பேட்டியில் “ எதிர்க்கட்சியான பாஜக கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாகவே மகாராஷ்டிரா அரசுவழிபாட்டுத் தலங்களை திறக்கிறது. இது இந்துத்துவாவிற்கு கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சிவசேனா எம்.பியும், செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ராவத்திடம், பாஜக எம்எல்ஏ பேச்சு குறித்து இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதிலில் “ மகாராஷ்டிரா அரசு வழங்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். வழிபாட்டுத் தலங்களை திறக்கும் விவகாரத்தில் யாரும் உரிமை கொண்டாட வேண்டாம். மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருந்தது. இப்போது கோயில்களை திறக்கவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருப்பதால் திறக்கப்படுகிறது.

இதில் இந்துக் கோயில்கள் மட்டும் திறக்கப்படவில்லை, அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படுகின்றன. ஆதலால், இந்துத்துவாவிற்கு வெற்றி என்று யாரும் கூற வேண்டாம். பிரதமர் மோடியின் அறிவுரையின்படியே கோயில்கள் அனைத்தும் கரோனா காலத்தில் மூடப்பட்டன. இந்த விவகாரம் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in