காஷ்மீர்: எல்லையில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் உடல்களுக்கு ராணுவம் இறுதி அஞ்சலி 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறலை எதிர்கொண்டபோது உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் உடல்களுக்கு சினார் கார்ப்ஸ் ராணுவம் இறுதி அஞ்சலி  | படம்: ஏஎன்ஐ.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறலை எதிர்கொண்டபோது உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் உடல்களுக்கு சினார் கார்ப்ஸ் ராணுவம் இறுதி அஞ்சலி | படம்: ஏஎன்ஐ.
Updated on
1 min read

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் பல செக்டர்களில் தொடங்கப்பட்ட தூண்டப்படாத போர் நிறுத்த மீறல்களில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களில் உடல்களுக்கு ராணுவம் இறுதி அஞ்சலி செலுத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தால் வடக்கு காஷ்மீரில் பல செக்டர்களில் தூண்டப்படாத போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டது. இதில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் எல்லைச் சண்டையில் ஈடுபட்டுவரும் சினார் கார்ப்ஸ் ராணுவம் இறுதி அஞ்சலி செலுத்தியது.

இதுகுறித்து ராணுவ வட்டாரத்தின் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நவம்பர் 13 அன்று பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறலை எதிர்கொள்வதற்காக யூரி செக்டரில் நிறுத்தப்பட்ட பீரங்கி படைப்பிரிவின் மறைந்த ஹவில்தார் ஹர்தன் சந்திர ராய் மற்றும் பீரங்கி படைப்பிரிவின் மறைந்த கன்னர் சுபோத் கோஷ் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

குரேஸ் செக்டரில் நிறுத்தப்பட்ட மறைந்த நாயக் சதாய் பூஷண் ராமேஸ்ராவ் மற்றும் மராட்டிய லைட் காலாட்படையின் மறைந்த ராணுவ வீரர் ஜொண்டலே ருஷிகேஷ் ராம்சந்திரா ஆகியோரும் எதிர்பாராத நிலையில் வீரமரணம் அடைந்தனர்.

உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் உடல்களுக்கு இந்திய ராணுவம் இன்று அஞ்சலி செலுத்தியது.

பாகிஸ்தான் ராணுவத்தால் தூண்டப்படாத பீரங்கி தாக்குதல்களை எதிர்கொண்ட துணிச்சல்மிக்க இந்த வீரர்கள் பல்வேறு பிளவு காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அருகிலுள்ள ராணுவ மருத்துவ நிலையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டபோது துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே அவர்கள் உயிர்பிரிந்தது.

நாவுகம் செக்டரில் நடந்த பாகிஸ்தான் போர்நிறுத்த மீறலின் போது வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) உதவி ஆய்வாளர் ராகேஷ் தோவலின் தியாகத்தையும் சினார் கார்ப்ஸ் ராணுவம் நினைவுகூர்கிறது.

இந்த சோகமான தருணத்தில், மறைந்த ராணுவ வீரர்களின் துயரம் மிகுந்த குடும்பங்களுடன் ஒன்றிணைந்து நிற்கிறது, மேலும் அவர்களின் கவுரவத்திற்கும் நல்வாழ்விற்கும் துணைநிற்க ராணுவம் உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு ராணுவ வட்டாரத்தின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in