

பிஹார் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 4-வது முறையாக முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்.
பாட்னாவில் நாளை பதவி ஏற்பு விழாவில் நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்கிறார்.
பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதில் பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் வென்றன. கடந்த 2005ம் ஆண்டுத் தேர்தலுக்குப்பின் ஜேடியு மிகவும் மோசமாகச் செயல்பட்டு 41 இடங்களில் மட்டுமே இந்த முறை வென்றது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி 110 இடங்களில் வென்றது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹெச்ஏஎம் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் பாட்னாவில் நிதிஷ் குமார் இல்லத்தில் இன்று பிற்பகலில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பாஜக சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், எம்எல்ஏ தர்கிஷோர், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில் பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதையடுத்து, இதையடுத்து, 4-வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
மாநில ஆளுநரிடம் ஏற்கெனவே தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை அளித்து, அமைச்சரவையைக் கலைக்க நிதிஷ்குமார் பரிந்துரைக் கடிதம் அளித்துவிட்டார்.
நாளை(16-ம் தேதி)பிஹாரில் பையா தூஜ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாள் மிகவும் புனிதமான நாள் எனக் கருதப்படுவதால்நாளையே நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி ஏற்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை நிதிஷ்குமார் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
இதற்கிடையே ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்ததலைவர் மனோஜ் ஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ எப்படி ஒரு கட்சியின் தலைவர் 40 இடங்களில் வென்றுவிட்டு முதல்வர் பதவியில் அமர முடியும். மக்களின் தீர்ப்பு அவருக்கு எதிராகத்தானே இருக்கிறது.
தேர்தலில் அவருக்கான ஆதரவு அழிந்துவிட்டதால், அவர் முதல்வர் பதவி குறித்து முடிவு எடுக்க வேண்டும். பிஹாரில் மாற்று அரசு குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதற்கு ஒருவாரமோ, 10 நாட்களோ, அல்லதுஒரு மாதமோ கூட ஆகலாம்”எனத் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த முறை 43 இடங்களில்தான் வென்றது ஆனால், கடந்த தேர்தலில் 71 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், பாஜக 74 இடங்களில் வென்று என்டிஏ கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது.
இருப்பினும் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி, நிதிஷ்குமாரே மீண்டும முதல்வராகத் தொடர்வார் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி நிதிஷ்குமார் 43 எம்எல்ஏக்கள் வைத்திருந்தாலும் முதல்வராகிறார்.
ஜேடியு கட்சி பல இடங்களில் தோல்வி அடைந்ததற்கு சிராக் பாஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சியே காரணம். லோக் ஜன சக்தி என்டிஏ கூட்டணியிலிருந்து விலகி நிதிஷ்குமாருக்கு எதிராகச் செயல்பட்டதால் 30 இடங்கள் வரை ஜேடியுவுக்கு இழப்பு ஏற்பட்டது.