

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும், பிஹார் முதல்வராகவும் நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்படலாம், ஆனால் அவரை பின்னால் இருந்து சிலர் இயக்குவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் விமர்சித்துள்ளார்.
பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
110 இடங்களில் காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி கைப்பற்றியது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹெச்ஏஎம் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நிதிஷ் குமார் இல்லத்தில் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று நிதிஷ் குமார் இல்லத்தில் தே.ஜ. கூட்டணிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பின் மறுநாள் 16-ம் தேதி நிதிஷ் குமார் 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் தே.ஜ.கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
‘‘பிஹாரை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமார் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். ஆனால் பாஜக சதி செய்த அவரை பலவீனமாக்கி விட்டது. எனவே இந்தமுறை நிதிஷ் குமாருக்கு முன்பு போல வாய்ப்பு கிடைக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும், பிஹார் முதல்வராகவும் நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் அவரை பின்னால் இருந்து சிலர் இயக்குவார்கள். சுதந்திரமாக செயல்பட முடியாது.’’ எனக் கூறினார்.