Published : 14 Nov 2020 03:02 PM
Last Updated : 14 Nov 2020 03:02 PM
இந்த தேசத்தைப் பற்றி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்? இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்த அவரின் கருத்து வெறுக்கத்தக்கது என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார். இந்த நூலில் உலக அளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து விவரித்துள்ளார்.
அந்த நூலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபராகப் போகும் ஜோ பைடன் ஆகியோர் குறித்தும் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார். மாணவரைப் போல் பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவர்தான். ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய விருப்பமோ அல்லது தகுதியோ ராகுல் காந்திக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் இருவரிடமும் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்.பியும், தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ஒரு வெளிநாட்டு அரசியல் கட்சித் தலைவர், இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து இதுபோன்று கருத்துகளைக் கூற முடியாது. அவரின் கருத்துகள் வெறுக்கத்தக்கவை. நாங்கள் ஒருபோதும் ட்ரம்ப் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டோம். இந்த தேசத்தைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்” எனக் கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!