Last Updated : 14 Nov, 2020 01:53 PM

 

Published : 14 Nov 2020 01:53 PM
Last Updated : 14 Nov 2020 01:53 PM

உங்களைச் சந்தித்தால்தான் தீபாவளி நிறைவடைகிறது: சீண்டினால் ஆக்ரோஷமான பதிலடி கொடுப்போம்: ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாகப் பேச்சு

ஜெய்சல்மாரில் உள்ள லாங்கேவாலா பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.

லாங்கேவால

நம்மை யாராவது சீண்டினால், இந்தியா ஆக்ரோஷமான பதிலடி கொடுக்கும் என்று ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாகமாகப் பேசினார்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் பதவியை நரேந்திர மோடி ஏற்றபின், நாட்டின் எல்லைகளைக் காக்கும் வீரர்களுடன் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார். எல்லையில் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், கலந்துரையாடியும், உற்சாகப்படுத்தும் நடவடிக்கையிலும் பிரதமர் மோடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையி்ல் இந்த தீபாவளிப் பண்டிகைக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள லாங்கேவாலா பகுதிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈட்டுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய மோடி, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''நான் உங்களுக்கு இந்த நேரத்தில் தீபத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு இந்தியன் சார்பிலும் இந்த வாழ்த்துகளை உங்களுக்குக் கூறுகிறேன்.

பனி படர்ந்த மலைகளிலோ அல்லது பாலைவனத்திலோ நீங்கள் பணியாற்றி வருகிறீர்கள். நான் உங்களிடம் வரும்போதுதான் எனக்கு தீபாவளி நிறைவடைந்ததுபோல் இருக்கிறது. உங்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சி இரு மடங்காகிறது.

இமயமலை உச்சியிலும், கடுமையான பாலைவனப் பகுதியிலும், அடர்ந்த வனப் பகுதியிலும், ஆழ்ந்த கடல் பகுதியிலும் உங்கள் துணிச்சல் ஒவ்வொரு சவாலிலும் வெற்றி பெறுகிறது.

ராணுவ வீரர்களின் சிறப்பான வரலாறு எழுதப்பட்டு, படிக்கப்படும் போதெல்லாம், லோங்கேவாலா போர் நினைவுகூரப்படும். 130 கோடி இந்தியர்களும் உங்களுடன் நிற்கிறார்கள்.

நம்முடைய வீரர்களின் துணிச்சல், வலிமையை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறார்கள். உங்களின் வெல்லமுடியாத திறமையைப் பற்றி மக்கள் பெருமைப்படுகிறார்கள். நம்முடைய எல்லையைக் காக்கும் பணியில் இருக்கும் வீரர்களை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

நம்முடைய பாதுகாப்புப் படையின் வலிமையை இந்தியா வேகமாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு பாதுகாப்புத் துறையில் முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்க கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையின் இந்த ஒரு முடிவு 130 கோடி இந்தியர்களை உள்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்காகக் குரல் கொடுக்கத் தூண்டியது.

இந்த உலகமே, இன்று ஆக்கிரமிப்பாளர்கள் (சீனா) மூலம் தொந்தரவுகளைச் சந்திக்கிறது. ஆக்கிரமிப்பு என்பது ஒருவகையில் மனநலக் கோளாறு மற்றும் 18ஆம் நூற்றாண்டின் சிந்தனையைத்தான் பிரதிபலிக்கிறது. இந்தச் சிந்தனைக்கு எதிராக இந்தியாவும் ஒரு வலுவான குரலாக மாறி வருகிறது.

எந்த விலை கொடுத்தாலும் தேசத்தின் நலனில் எந்த நாடும் சமரசம் செய்து கொள்ளமாட்டார்கள் என்பதை உலகம் தற்போது புரிந்துகொள்கிறது. உங்களின் வலிமை மற்றும் துணிச்சலால்தான் இந்தியாவின் மரியாதையும் மதிப்பும் உயர்ந்துள்ளது. நீங்கள் தேசத்தைப் பாதுகாப்பதால்தான் இந்தியா சர்வதேச அரங்கில் நம்முடைய கருத்தைத் தெளிவாக எடுத்துவைக்க முடிகிறது.

நீங்கள் இருக்கும் வரை, இந்த நாட்டின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முழு வீச்சிலும், மிகவும் ஒளிமயமாகவும் நடக்கும்.

இந்தியாவின் கொள்கை தெளிவாக உள்ளது. இன்றைய இந்தியா மற்ற நாடுகளைப் புரிந்துகொள்வதையும், புரிந்துகொள்ளும் கொள்கையையும் நம்புகிறது. ஆனால், நம்மை யாரேனும் சீண்டிப்பார்க்க முயன்றால் அவர்களுக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுப்போம்.

நான் நம்முடைய ராணுவ வீரர்களுக்கு 3 விஷயங்களைக் கூற விரும்புகிறேன். முதலாவது புதுமை செய்வதன் மூலம் புத்திக்கூர்மை அதிகரிக்கும். அதனால் புத்தாக்கத்தில் ஈடுபட வேண்டும்; இரண்டாவது யோகா பயிற்சி; மூன்றாவது உங்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். இது புதிய கண்ணோட்டங்களையும் உற்சாகத்தையும் வளர்க்க உதவும்.

தீவிரவாதிகளையும், தீவிரவாதத் தலைவர்களையும் அவர்களின் இருப்பிடத்துக்குள்ளே சென்று இந்தியா கொல்கிறது. இந்த தேசம் அதன் நலன்களுடன் ஒருபோதும், எந்தவிலை கொடுத்தாலும் சமரசம் செய்யாது என்பதை உலகம் இப்போது புரிந்துகொள்கிறது. இந்தியாவின் நற்பெயர் மற்றும் அந்தஸ்து உயர்வதற்கு உங்களின் வலிமை மற்றும் வீரமே காரணம்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x