

தொலைநோக்குடன் சகோதரத்துவம், சமத்துவம், நவீன சிந்தனை ஆகியவற்றால் தேசத்துக்கு அடித்தளமிட்டவர் ஜவஹர்லால் நேரு என்று நேருவின் பிறந்த நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று நேருவின் 131-வதுபிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, புதுடெல்லியில் சாந்தி வானாவில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்துக்கு இன்று காலை சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் ராகுல் காந்தி ட்விட்டரில் ப திவிட்ட கருத்தில், “இன்று, தேசத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை இந்தியா கொண்டாடுகிறது. சகோதரத்துவம், சமத்தும், நவீன சிந்தனை ஆகியவற்றால் தேசத்துக்கு தொலைநோக்குடன் அடித்தளமிட்டவர். இந்த மதிப்பு மிகுந்த விஷயங்களை கண்டிப்பாகப் பாதுகாப்பதே எங்களின் முயற்சியாகும்” எனத் தெரிவித்தார்.
நேருவின் 131-வது பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தேசத்தின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.