

திருவனந்தபுரம்: கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளராக பதவி வகித்து வந்த கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு கணைய புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அவரது மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேரள மாநில செயலாளர் பதவியில் இருந்து கொடியேரி பாலகிருஷ்ணன் நேற்று விலகியுள்ளார். அந்தப் பதவிக்கு கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெங்களூருவில் செயல்படும் போதைப்பொருள் கும்பலுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனால் கட்சி தலைமையின் அழுத்தத்தின் பேரில் அவர் பதவி விலகியிருக்கலாம் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.