வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் விவசாயிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

டெல்லியில் நேற்று வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் அமைச்சர்கள் பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று விவசாயிகளிடம் அமைச்சர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர். படம்: பிடிஐ
டெல்லியில் நேற்று வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் அமைச்சர்கள் பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று விவசாயிகளிடம் அமைச்சர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதி களுடன் மத்திய அமைச்சர்கள் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) சட்டம்,விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவை கடந்த செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் நிறுத்தப்படலாம். இந்தசட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகளைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலைதிட்டம் நிறுத்தப்படாது. வேளாண் சட்டங்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்ந்தன. பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் சரக்கு ரயில், பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

இந்த பின்னணியில் கடந்த அக்டோபர் 14-ம் தேதி மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வேளாண் சட்டங்களில் முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றுவிவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப்மாநில விவசாயிகள் சங்க தலைவர் ராஜீந்தர் சிங் கூறும்போது, "மத்திய அரசிடம் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இதில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். வரும் 26, 27-ம் தேதிகளில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

பேச்சுவார்த்தைக்கு முன்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, "விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்களின் சந்தேகங்கள் களையப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in