

அரசியல் சட்டப் பிரிவு 370 இருந்தாலும் இல்லாவிட்டாலும் காஷ்மீர், இந்தியாவின் பகுதியே என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு ஆர்.எஸ்.எஸ். பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ திரும்பப் பெற்றால் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
மோடி அரசின் புதிய அமைச்சர் ஜிதேந்திரா சிங், காஷ்மீர் குறித்து கூறுகையில் அரசியல் சட்டம் 370ஆம் பிரிவின் நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஒமர் அப்துல்லா, ஒன்று அரசியல் சட்டப ்பிரிவு 370 நடைமுறையில் இருக்கும் அல்லது காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது என்று பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தன் ட்விட்டர் பதிவில், அரசியல் சட்டப் பிரிவு 370 இருந்தாலும், இல்லாவிட்டாலும் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.