Last Updated : 13 Nov, 2020 05:32 PM

 

Published : 13 Nov 2020 05:32 PM
Last Updated : 13 Nov 2020 05:32 PM

இன்னும் 25 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்வோம்: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் காட்டம்

மகாராஷ்டிராவில் இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்வோம் என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர பாஜகவின் முன்னாள் எம்.பி. கீர்த்தி சோமையா கடந்த இரு நாட்களுக்கு முன் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதில், " உள் அரங்கு வடிவமைப்பாளர் அன்வி நாயக் குடும்பத்துக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குடும்பத்துக்கும் நிலத்தகராறு இருந்தது.

அதில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அந்தத் தற்கொலையின் விசாரணையை அர்னாப் கோஸ்வாமி மீது உத்தவ் தாக்கரே திசைதிருப்பிவிட்டார். ஆதலால் நிலத்தகராறு குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று குற்றம் சாட்டினார்.

அன்வி நாயக்கைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில்தான் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்திடம் இன்று மும்பையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “பாஜக ஒரு வியாபாரிக் கட்சி. அந்த வியாபாரிக் கட்சியின் செய்தித் தொடர்பாளருக்கு, அன்வி நாயக்கின் மனைவியிடம் பேசுவதற்குத் துணிச்சல் இல்லை, தயாராகவும் இல்லை.

அன்வி நாயக்கின் மனைவியும், அவரின் மகளும் நீதி கேட்டுக் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்கிறோம் என உறுதி அளித்துள்ளது சிவசேனா. இந்தத் தற்கொலை வழக்கில் தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி விசாரணயைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு.

முதல்வர் உத்தவ் தாக்கரே, அன்வி நாயக் குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்சினை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சோமையாவுக்கு இந்த ஒப்பந்தத்தை ஒரு மராத்தி நபர் செய்ததில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா?

சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி அரசு அவர் நினைக்கும் வகையில் கவிழாது. 2024-ம் ஆண்டுவரை ஆட்சி செய்யும்.

மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிக்கு வராமல் நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் நோக்கம் அன்வி நாயக் குடும்பத்தாருக்கு நீதி பெற்றுத் தருவதும், சட்டரீதியாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதும்தான். வியாபாரிகள் கட்சி குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்க முயல்கிறது.

21 ஒப்பந்தங்கள் குறித்து சோமையா கூறுகிறார். என்னிடம் 5 ஒப்பந்தங்களைக் காண்பிக்கட்டும். அன்வி நாயக்கும், அவரின் தாயும் தற்கொலை செய்துகொண்டது குறித்துப் பாஜகவுக்குக் கவலையில்லையா?''

இவ்வாறு சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x