Published : 13 Nov 2020 08:07 AM
Last Updated : 13 Nov 2020 08:07 AM

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறது என்ற ஆர்பிஐ அறிக்கையை  மறைக்கவே நிதியமைச்சர் ஆத்மநிர்பார் திட்டத்தை வெளியிட்டுள்ளார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறது என்ற ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையை மூடி மறைக்கவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆத்மநிர்பார் 3.0 திட்டத்தை வெளியிட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு லாக்டவுனை அறிவித்தது. இந்த லாக்டவுனால் நிறுவனங்கள், தொழில்கள், வர்த்தகம், சிறு, குறுந்தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

தொடர்ந்து ஜூலை-செப்டம்பர் மாத 2-வது காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.6 சதவீதம் சரியும் என ரிசர்வ் வங்கியின் மாதாந்திர ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டு முழுவதும் மைனஸ் 9.5 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்நிலையில் நேற்று திடீரென மத்திய நிதியமைச்சர் ஆத்மநிர்பார் 3.0 திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார். இந்தியப் பொருளாதாரம் கரோனா கால மந்தநிலையிலிருந்து விரைவாக மீண்டு வருகிறது. 3-வது காலாண்டிலிருந்து இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது எனத் தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், “ நடப்பு நிதியாண்டின் முதல் இரு காலாண்டுகளிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸில் சென்றுள்ளது. மீதமுள்ள 2 காலாண்டுகளும் இதேபோன்று மைனஸில் செல்லவே வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தை மீட்சி பெறச் செய்ய முறையான திட்டங்கள் மத்திய அரசிடம் இல்லை.

மாறாக, பொருளாதார மந்தநிலை குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கையிலிருந்து திசை திருப்பும் செயல்களிலும், நாளேடுகளில் தலைப்புச் செய்தி கொடுக்கவும் மத்திய அரசு ஆர்வத்துடன் ஈடுபடுகிறது.

விவசாயிகளுக்கு நியாயமான, ஊக்கம் தரும் விலையை அளித்தல், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை மக்கள் கையில் பணம் வழங்குதல், அமைப்பு சார்ந்த தொழில்களில் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குதல், மாநில அரசுகளுக்கு அதிகமான நிதி வழங்குதல் மூலமே பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும்.

மாநிலங்களுக்குப் பணம் வழங்குவதைக் குறைத்தால், மாநில அரசுகள் 2020-21ம் ஆண்டில் தங்களின் முதலீட்டுச் செலவைக் குறைத்துவிடுவார்கள். இதனால் நடப்பு நிதியாண்டில் பொருளதாாரத்தை மீட்சிக்குக் கொண்டு வருவது விருப்பத்துடன் கூடிய பிரார்த்தனையாக மட்டுமே இருக்கும்” என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், “2020-21ஆம் நிதியாண்டின் மற்ற இரு காலாண்டுகளின் பொருளாதார வளர்ச்சியும் மைனஸில் செல்லும் அச்சம் இருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது என்ற ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மூடிமறைக்கும் வகையில், 3-வது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியைக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது காலாண்டின் ஒன்றரை மாதம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. 3-வது காலாண்டில் முன்னேறறம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் துணைபுரியாது. இந்த மிகப்பெரிய அறிவிப்புகளின் தாக்கம், வர்த்தகம், தொழில், வியாபாரம், குறிப்பாக நடுத்தர, சிறு, குறுந்தொழில்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறது என்ற ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையை மக்களுக்குத் தெரியவிடாமல் மூடி மறைக்கும் முயற்சியாகவே இருக்கிறது. ஆத்மநிர்பார் 3.0 திட்டம் என்ற பெயரில் தீபாவளி தமாகா திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x