

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் தாயாரின் திருவீதி உலா முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயிலுக்குள் தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று முன்தினம் இரவு சின்ன சேஷ வாகனத்திலும், 2-ம் நாளான நேற்று காலையில் பெரிய சேஷ வாகனத்திலும் தாயார் எழுந்தருளினார்.
முதல் நாள் பிரம்மோற்சவத்தில், ஆந்திர அரசு சார்பில் துணை முதல்வர் நாராயணசாமி பட்டு வஸ்திரங்களை தாயாருக்கு காணிக்கையாக அளித்தார். 2-ம் நாள் காலை, சயன அலங்காரத்தில் தாயார் பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்தார். இதில் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து நேற்றிரவு ஹம்ச வாகன சேவையும் நடந்தது. மேலும், தாயார் பிரம்மோற்சவத்திற்கு சென்னையைச் சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி சார்பில் 3 புதிய திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டன.