

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட்ட இடதுசாரிகள் 16-ல் வெற்றி பெற்றுள்ளனர். இம்மாநிலத்தில் மாற்று அரசியல் அமைய வேண்டும் எனக் கோரி வரும் இவர்கள்இதனால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அமைத்த மெகா கூட்டணியில் இடதுசாரிகள் முதன்முறையாக இத் தேர்தலில் இணைந்தனர். இவர்களுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிபிஐ-எம்எல் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12-ல்வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4-ல் போட்டியிட்டு இரண்டிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6-ல் போட்டியிட்டு இரண்டிலும் வென்றுள்ளன.
கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஐ-எம்எல் மட்டும் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. சுமார் 3.5 ஆக இருந்த இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் தற்போது 5.5 ஆக உயர்ந்துள்ளது. இது ஜார்க்கண்ட் பிரியாமல் இருந்தபோது, கிடைத்த தற்கு பின் நல்ல வரவேற்பாகக் கருதப்படுகிறது.
பிஹாரில் 1995-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இடது சாரிகளுக்கு 38 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இதையடுத்து படிப் படியாக குறையத் தொடங்கிய அவர்களின் செல்வாக்கு தற்போது சற்று உயர்ந்திருப்பதாகக் கருதப் படுகிறது.
இதுகுறித்து சிபிஐ-எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா கூறும் போது, “பிஹாரில் நாங்கள் இணைந்து போட்டியிட்ட மெகாகூட்டணியின் ஆட்சி அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந் திருக்கும். எங்களின் வெற்றி தற்போதைய அரசின் 15 ஆண்டு கால ஆட்சி மீது மக்களிடம் உள்ள கோபத்தைக் காட்டுகிறது. பிஹாரில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடி எங்கள் செல்வாக்கை அதிகரிப்போம்” என்றார்.
பிஹாரில் தொடர்ந்து மெகா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட இடதுசாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்து மேற்கு வங்க தேர்தலிலும் சிபிஐ-எம்எல் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் மீது லாலு கோபம்
இதனிடையே, சில தொகுதிகள் வித்தியாசத்தில் மெகா கூட்டணி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் மீது லாலு குற்றம் சுமத்தியுள்ளார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் அவர், தற்போது ஜார்க்கண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவர் தன்னை சந்திக்கவருவோரிடம் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் மீது புகார் கூறி வருவதாகத் தெரியவந்துள்ளது.
மெகா கூட்டணியில் 70 தொகுதிகள் பெற்ற காங்கிரஸ் 51-ல் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவர்களின் அஜாக்கிரதையால் தனது மகன் தேஜஸ்வி பிரசாத் முதல்வராக முடியாமல் போனதாக லாலு புலம்புவதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணமானவர்களை மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லாலு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.