Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

தெலங்கானாவில் பட்டாசு வெடிக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தெலங்கானா முழுவதும் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதியுங்கள் எனஅம்மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பட்டாசு புகையை சுவாசிக்கும் கரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிப்பதால், இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என இந்திர பிரகாஷ் என்ற வழக்கறிஞர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ராகவேந்திர சவுகான், நீதிபதி விஜயாசென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கறிஞர் இந்திரபிரகாஷ் வாதிடும்போது, “பட்டாசுவெடிப்பதால் கரோனா நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படும்என்பதால் டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியாணா ஆகியமாநிலங்களில் பட்டாசு விற்கவும்,வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தெலங்கானாவிலும் தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதற்கு, ஏற்கெனவே பல இடங்களில் பட்டாசு விற்பனை நடந்துவிட்டதாக அட்வகேட் ஜெனரல் பதிலளித்தார். இதில் கோபமடைந்த நீதிபதிகள், “எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்து விட்டீர்களா? கரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் பட்டாசு விற்பீர்களா?” என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, “மாநிலம் முழுவதும் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் உடனே தடை விதிக்க வேண்டும். இத்தடை தொடர்பாக அச்சு மற்றும் எலெக்ட்ரானிக் ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக வரும் 19-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x