

வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற அரசு சாரா அமைப்புகளுக்கு (என்ஜிஓ) புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்தியாவில் அமைந்துள்ள மத சம்பந்தமான பல்வேறு என்ஜிஓக்கள் கல்வி, ஆன்மிகம்,சமூக சேவை என வெளிநாடுகளில் நிதி பெற்று இந்தியாவில் அந்தநிதியை முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து என்ஜிஓ-க்கள் நிதியைப் பெறுவது தொடர்பாக விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் இந்த வெளிநாட்டு நிதி உதவியை பெற முடியாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வெளிநாட்டிலிருந்து நிதி வழங்கக் கூடியவர்கள் என்ன காரணத்துக்காக நிதியை வழங்குகிறார்கள் என்பதற்கான கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும். இந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூ.15 லட்சத்தை நலத்திட்டங்களுக்காக செலவிட்டிருக்க வேண்டும்
அதேபோல வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்கக் கூடிய நிறுவனங்கள், அதற்காகசெலுத்த வேண்டிய கட்டணங்களையும் அரசு உயர்த்தியுள்ளது.
எப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யவிரும்பும் அரசுசாரா அமைப்புகள்,தொண்டு நிறுவனங்களின் அலுவலர்கள், நன்கொடையாளரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட உறுதிப்பாட்டு கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அதில் வெளிநாட்டு பங்களிப்பு அளவு மற்றும்எந்த நோக்கத்துக்காக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அண்மையில் எப்சிஆர்ஏ சட்டத்தில் செய்யப்பட்ட புதிய திருத்தங்கள்படி புதிய அரசுசாரா அமைப்புகளின் அலுவலக பொறுப்பாளர்களின் ஆதார் எண்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு நிதியில்அலுவலக செலவுகள் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன. தேர்தல் வேட்பாளர்கள், அரசு ஊழியர்கள், எந்தவொரு பேரவை உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் வெளிநாட்டு நிதியை ஏற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2016-17-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரை இந்தியாவிலுள்ள என்ஜிஓ-க்கள் ரூ.58ஆயிரம் கோடிக்கும் அதிகமாகவெளிநாட்டு நிதியுதவியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.