கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காக உயிரி தொழில்நுட்பத் துறைக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காக உயிரி தொழில்நுட்பத் துறைக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Updated on
1 min read

கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காக உயிரி தொழில்நுட்பத் துறைக்கு 900 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நீண்டகால ஊரடங்கு காரணமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மீண்டு வர, வளர்ச்சிக்கான பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.

மத்திய அரசு தற்போது கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பதற்கான மானியத்தையும் அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்துக் கூறியதாவது:

''கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காக உயிரி தொழில்நுட்பத் துறைக்கு 900 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் கோவிட் சுரக்ஷா பணிக்காக செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்படும்.

தடுப்பூசி மற்றும் விநியோகச் செலவினங்களின் உண்மையான செலவை இந்த மானியம் ஈடுகட்டவில்லை. தற்போது வழங்கப்படும் 900 கோடி ரூபாய் உயிரி தொழில்நுட்பத் துறை சார்பாக மேற்கொள்ளப்படும் கோவிட் ஆராய்ச்சி வளர்ச்சிக்காக மட்டுமே செலவிடப்படும்.

மற்றபடி தடுப்பூசி விநியோகத்தின் உண்மையான செலவு அல்லது தடுப்பூசியை விநியோகிக்கத் தேவையான தளவாடங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அதற்குத் தேவையானவை என்ன? எப்போது என்பதறிந்து அப்போது அதற்காக தனியே செலவிடப்படும்.

இதுதவிர, உள்நாட்டுப் பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்துறை ஊக்கத்தொகை, உள்கட்டமைப்பு, பசுமை எரிசக்தி ஆகியவற்றிற்கான மூலதனம் மற்றும் தொழில்துறை செலவினங்களுக்காக ரூ.10,200 கோடி கூடுதல் பட்ஜெட் செலவினம் வழங்கப்படும்''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in